மும்பை: கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக தற்போது பங்கேற்கவிருந்த பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியை நடிகை தீபிகா படுகோனே ஒத்திவைத்தார்.
ஃபிரான்ஸில் இயங்கிவரும் பிரபல ஃபேஷன் நிறுவனமான லூயிஸ் உய்ட்டனின் பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி இன்று (மார்ச் 3) நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காகப் பாரிஸ் செல்ல திட்டமிட்டிருந்த தீபிகா, கொரோனா வைரஸ் பீதி காரணமாக தனது பயணத்தை ரத்துசெய்துள்ளார். இது தொடர்பாக அவரது செய்தித்தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் சர்வதேச பரப்புரை ஒன்றில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றவர் தீபிகா. இதையடுத்து தங்களது பரப்புரைக்காக எடுத்துக்கொண்ட கருப்பொருளை வைத்து போட்டோஷுட் செய்த இந்த நிறுவனம், அந்தப் புகைப்படங்களை வெளியிட்டது. இதில் தீபிகாவின் புகைப்படமும் இடம்பிடித்திருந்தது.