மும்பை காவல் துறையின் அறக்கட்டளைக்கு ரூ. 2 கோடி நன்கொடை கொடுத்ததற்காக நடிகர் அக்ஷய் குமாருக்கு மும்பை காவல் துறை ஆணையர் பரம் பீர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்றால் பொருளாதரம் கடுமையாக பாதிப்புள்ளாகியுள்ளது. மேலும், கரோனா நிவாரண நிதிக்கு பிரபலங்கள், மக்கள் நிதியுதவி செய்யுங்கள் என பிரதமர் மோடியும் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் நிதியுதவி அளித்தனர்.
முதலில் பி.எம் கேர்ஸ் நிதிக்கு 25 கோடி ரூபாயை நடிகர் அக்ஷய் குமார் வழங்கினார். பின் மும்பை மாநகராட்சிக்கு ரூ. 3 கோடி வழங்கினார். இதனைத்தொடர்ந்து தற்போது மும்பை காவல் துறை அறக்கட்டளைக்கு ரூ. 2 கோடி வழங்கியுள்ளார்.
அக்ஷய் குமாரின் இந்த நன்கொடை குறித்து மும்பை காவல் துறை ஆணையர் பரம் பீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "மும்பை காவல் துறை அறக்கட்டளைக்காக அக்ஷய் குமார் வழங்கிய நன்கொடை ரூ. 2 கோடிக்கு காவல் துறை நன்றி தெரிவிக்கிறது.
நகரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், மும்பை காவல் துறையைச் சேர்ந்து ஆண் - பெண்களின் உயிரைப் பாதுகாக்க உங்கள் பங்கு பெருமளவும் உதவும்" என்று ட்வீட் செய்தார்.
ஆணையருக்கு பதிலளிக்கும் விதமாக அக்ஷய் குமார், "கரோனாவை எதிர்த்து உயிரழந்த மும்பை காவல் துறையின் தலைமை கான்ஸ்டபிள்கள் சந்திரகாந்த் பெண்டரூகர், சந்தீப் சூர்வேவுக்கு என் வணக்கங்கள். நான் எனது கடமையைச் செய்திருக்கிறேன். நீங்களும் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் பாதுகாப்பாக உயிரோடு இருப்பதற்கு அவர்கள்தான் காரணம் என்பதை மறக்க வேண்டாம்" என்று ட்வீட் செய்துள்ளார்.
அக்ஷய் குமாரின் இந்த உதவிக்கு நெட்டிசன்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.