ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள '83' படம் வெளியாகும் தேதி கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு '83' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபில் தேவ் மனைவி கேரக்டரில் ரன்வீர் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
இதேபோல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடிய வீரர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் வேடத்தில் கோலிவுட் நடிகர் ஜீவா நடித்துள்ளார். கபீர் கான் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரவிருந்தது.
'83' படத்தின் தமிழ் பதிப்பின் உரிமையை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் பெற்றிருந்தது. உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக '83' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது.
இது குறித்து ரன்வீர் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்களுக்கு ரசிகர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிக முக்கியம். அவர்களது நலனில் அக்கறை கொள்கிறோம். '83' படம் எங்களது படமமட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் படம், பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் விரைவில் திரும்பி வருவோம் என்று பதிவிட்டுள்ளார்.