சுஷாந்த் சிங் காதலி ரியாவிடம் சிபிஐ விசாரணை - சிபிஐ விசாரணை
மும்பை: சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக ரியாவிடம் சிபிஐ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு சுஷாந்தின் காதலி ரியாவும் அவரது குடும்பத்தினருமே காரணமென கூறி சுஷாந்தின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது.
இதனையடுத்து சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
அண்மையில் சுஷாந்தின் தந்தை கேகே சிங் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் ரியாதான் தனது மகனுக்கு விஷம் தந்து கொன்ற கொலையாளி என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ரியாவிடம் சிபிஐ அலுவலர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ரியா சிபிஐ முன் முதல்முறையாக இன்று ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரங்களுக்கு மேலாக சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
மும்பையில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. ரியாவுடன் சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானி, மேலாளர் சாமுவேல் மிராண்டா, உதவியாளர் தீபேஷ் ஆகியோரிடமும் சிபிஐ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக ரியாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.