நடிகைகள், விளையாட்டு பிரபலங்கள் ஆகியோர் தங்களின் வாழ்வில் நடைபெறும் முக்கியமான தருணங்களை ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண் திரைப்பிரபலங்கள் அந்த தருணங்களை வெளியிட்டு தங்களின் தாய்மையை உலகுக்கு அறிவிக்கின்றனர்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான புருனா அப்துல்லா, தான் குழந்தையை பெற்றெடுத்த தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். வாட்டர் பெர்த் முறையில் தனது பெண் குழந்தையை ஈன்றெடுத்த தருணத்தின் உணர்ச்சிபுறமிக்க புகைப்படத்தை பதிவிட்டு, குழந்தை பெற்றெடுத்த நிகழ்வு குறித்து சிறிய கதையையும் அதில் அவர் பதிவிட்டிருந்தார்.
கணவருடன் புருனா அப்துல்லா அந்த பதிவில், நான் கருவுறும் முன்பே வாட்டர் பெர்த் முறையில் குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தேன். எனது குழந்தை மருந்துகள் இல்லாமல் அமைதியான முறையில் இந்த உலகை காண வேண்டும் என நினைத்தேன். நான் குழந்தையை பெற்றெடுக்கும் போது என்னைச் சுற்றி நான் விரும்பும் எனது கணவர், எனது தாய் மற்றும் மருத்துவர் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அது எனக்கு மன அமைதியை அளித்தது.
நான் என் குழந்தைக்காக உணவு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டேன். நான் வலியில்லாமல் குழந்தையை பெற்றெடுக்க நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. எனினும் எனது மகள் பிறந்தவுடன் எனது வலிகள் அனைத்தும் மறைந்து நான் சிறிது நேரத்திலேயே சாதாரண நிலைக்கு வந்துவிட்டேன். எனக்கு அனைத்தும் எனது மகள் தான். இதை எனக்கு அளித்த எனது கணவருக்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த புருனா அப்துல்லா, ஒரு விளம்பர மாடல் ஆவார். இவர், கடந்த 2007ஆம் ஆண்டு கேஷ் என்ற பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் கவர்ச்சி நடனமாடினார். அதைத் தொடர்ந்து ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ் படத்திலும், தேசி பாய்ஸ் படத்தில் பாடலில் நடனமாடிய இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் பங்கேற்றிருக்கிறார். தமிழிலில் இவர் கடந்த 2012ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பில்லா-2 படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து ஒரு சில பாலிவுட் படங்களிலும் நடித்த இவருக்கு கடந்தாண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆலன் ஃபிரேஸ் என்ற ஆண் நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தாண்டு மே மாதம் அவரை புருனா மணமுடித்தார்.
இந்நிலையில் புருனாவிற்கு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததது. தற்போது புருனா, அவரது பெண் குழந்தை இசபெல்லாவின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.