இந்திய திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையும் தெலுங்கு சினிமாவின் புகழ் பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் (ஏ.என்.ஆர்) பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்து வருகின்றனர்.
கலை, கலாச்சாரம் வியாபார ரீதியில் சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் கலைஞர்களுக்கு அக்கினேனி நாகேஸ்வரராவ் குடும்பத்தினர் விருதுகளை வழங்கிவருகின்றனர். சமீபத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் 2018 ஆம் ஆண்டுக்கான ஏ.என்.ஆர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் 2019 ஆம் ஆண்டுக்கான ஏ.என்.ஆர் விருது நடிகை ரேகாவுக்கும் வழங்கினர் . இந்த விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைப்பெற்றது. இதனையடுத்து ஸ்ரீதேவிக்கான விருதை அவரது கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் பெற்றுக்கொண்டார்.
இந்த விருதை தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி வழங்கினார். அப்போது நாகரார்ஜூனா உடனிருந்தார். இந்த விருதை பெற்றுக்கொண்ட போனிகபூர் ஸ்ரீதேவியை எண்ணி கண்கலங்கினார். இதனை பார்த்த சிரஞ்சீவியும் நாகரார்ஜூனாவும் அவரை தேற்றினர்.
பின் இந்த விருது குறித்து அவர் கூறுகையில், ஸ்ரீதேவி இருந்திருந்தால் நிச்சயம் இந்த விருதை தாழ்மையுடன் பெற்றுக்கொண்டிருப்பார். அவர் சார்பாக இந்த விருதை பெறும் நான் மனதாழ்மையுடன் பெற்றுக்கொள்கிறேன் நன்றி என்றார்.