மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. ‘டவ் தே’ என பெயரிடப்பட்ட இந்தப் புயல், அதிதீவிர புயலாகி மாறி கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, மும்பையில் மழை வெளுத்து வாங்கியது. சுழன்று அடித்த காற்றுடன், கனமழையும் கொட்டி தீர்த்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. குஜராத்தில் போர்பந்தர்- மஹூவா இடையே மணிக்கு 190 கிமீ வேகத்தில் டவ்-தே புயல் நேற்றிரவு கரையைக் கடந்தது.
ஈர உடையில் இருந்த அலுவலக ஊழியர்கள்: தனது உடைகளை வழங்கிய பிக்-பி - அமிதாப் பச்சனின் ஜானக் அலுவலகம்
மும்பை: டவ்-தே புயல் காரணமாக பெய்த மழையால் பாலிவுட் பிக்-பி அமிதாப் பச்சனின் அலுவலகம் வெள்ளத்தில் மூழ்கியது. மழையில் நனைந்த உடைகளுடன் இருந்த ஊழியர்களுக்கு அமிதாப் பச்சன் தனது உடைகளை வழங்கியுள்ளார்.
மும்பையில் பெய்த கனமழை காரணமாக மும்பை புறநகர் ஜுஹுவில் உள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் ஜானக் அலுவலகம் வெள்ளத்தில் மூழ்கியதாக அவர் தெரிவித்தார். இது குறித்து அமிதாப் பச்சன் மேலும் கூறுகையில், " ஜானக் அலுவலகத்தில் தடுப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மழை அதை சிதைத்தது. அலுவலகத்தில் பணியாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட அறைகள் முற்றிலும் சேதமடைந்தது.
இடைவிடாத மழையில் அலுவலகத்தில் நனைந்த சீருடையுடன் வேலைபார்த்த ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இதுபோன்ற நேரத்தில் ஊழியர்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றனர். நனைந்த உடையில் இருக்கும் ஊழியர்களுக்கு எனது அறையின் அலமாரியிலிருந்து சில உடைகளை அவர்களுக்கு வழங்கினேன். அதைப்பெற்றுக்கொண்ட அவர்கள் பெருமையுடன் உணர்கிறார்கள்" என்றார்.