நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து கருத்துத் தெரிவித்து வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், சிவசேனா ஆட்சி குறித்தும் பேசினார். அப்போது, “மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறிவருகிறது” என்று கூறினார்.
இந்நிலையில் மும்பை குறித்த கருத்துக்கு கங்கனா ரணாவத் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவர் மும்பை நகரத்திற்கு வரக்கூடாது எனவும் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
இதனால், கங்கனா ரணாவத்திற்கும் சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்துக்கும் ட்விட்டரில் சண்டை மூண்டது. இதனைத்தொடர்ந்து கங்கனா ரணாவத்திற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர்கள், மும்பை நகரத்தை விமர்சித்த நபருக்கு பாஜக அரசு பாதுகாப்பு அளிக்கிறது என்றனர்.
இந்த வாக்குவாதம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மும்பை பந்த்ரா பகுதியில் கங்கனாவின் அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடித்தது. இதற்கிடையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கை பாதியில் நிறுத்தப்பட்டது.
கங்கனா ரணாவத் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும் கடுமையாக சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர்.
தற்போது கங்கனா ரனாவத் சிவசேனா நிறுவனர் மறைந்த பாலாசாகேப் தாக்கரே அளித்த பேட்டியின் பழைய வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துள்ளார். அதனுடன் தனது கட்சியின் இன்றைய நிலையை கண்டால் அவர் எப்படி உணர்வார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வீடியோவை பதிவிட்டு கங்கனா ரனாவத் கூறியதாவது, “மதிப்புக்குரிய பாலாசாகேப் தாக்கரே எனக்கு மிகவும் பிடித்த தலைவர்களில் ஒருவர். தேர்தல்கள் குழு விவாதத்தை விரும்பாதவரின் மிகப்பெரிய அச்சம் சிவசேனா கட்சி ஒருநாள் காங்கிரஸ் ஆக மாறும் என்பதாகும். தனது கட்சியின் இன்றைய நிலையை அவர் பார்த்தால் அவர் எப்படி உணர்வார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:“அதற்கு எப்படி நான் பொறுப்பாக முடியும்”- ராவத் அடித்த அந்தர் பல்டி!