மும்பை: ஏக் தம்மில் நூறு மீட்டர் ஓடியிருக்கும் 62 வயதாகும் பாலிவுட் முன்னாள் ஹீரோ அனில் கபூர், அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
1980-90 காலகட்டங்களில் பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம்வந்தவர் அனில் கபூர். 2000ஆம் ஆண்டுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியவர், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்துவருகிறார்.
வட இந்தியாவில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நிகழும் பெளர்ணமிக்கு அடுத்த நான்காவது நாள் கர்வா செளத் என்ற விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்களது கணவரின் நீண்ட ஆயுளுக்காக அதிகாலை சூரிய உதயத்திலிருந்து, மாலை சந்திரன் உதயம் நிகழும் வரை உணவு ஏதும் உட்கொள்ளாமல் விரதம் இருப்பார்கள்.
வட மாநிலங்களான ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர், உத்தரப் பிரேதசம், பிகார், ஜார்கண்ட், இமச்சாலப் பிரேதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கர்வா செளத் கொண்டாடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் ’அட்லா தட்டே’ என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் கொண்டாடும் இந்த விழாவானது இன்று வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து இந்த விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாலிவுட் முன்னாள் ஹீரோ அனில் கபூர் தனது உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்வீட்டரில், ”உனது காதல், பிரார்த்தனை, விரதம் ஆகியவைதான் என்னை இவ்வளவு வேகமாக ஓட வைப்பதுடன், எப்போதும் ஆரோக்கியமாகவும் வைத்துள்ளது. இனிய கர்வா செளத் வாழ்த்துகள்” என்று தனது மனைவிக்கு மரியாதை செலுத்தி, வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.