பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் 2001ஆம் ஆண்டு ட்விங்கிள் கண்ணாவைத் திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டில் நடிகையான இவர், சில ஆண்டுகளில் திரைத்துறையில் இருந்து விலகி, தற்போது எழுத்தாளராக அவதரித்துள்ளார்.
ட்விங்கிள் கண்ணா பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்த டிம்பிள் கபாடியாவின் மகள் ஆவார். தற்போது டிம்பிள் கிறிஸ்டோபார் நோலன் இயக்கிய 'டெனெட்' படத்தில் பிரியா என்னும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு சில நாடுகளில் மட்டுமே வெளியான இந்தப் படம், நேற்று (டிச.04) இந்தியாவில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அக்ஷய் குமார் தனது மாமியார் டிம்பிள் கபாடியாவுக்கு கிறிஸ்டோபர் நோலன் எழுதியக் குறிப்பையும், கிறிஸ்டோபர் நோலனுடன் டிம்பிள் இருக்கும் புகைப்படத்தையும் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இதோ என் பெருமைமிக்க மருமகன் தருணம்" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும், நோலன் தனது படமான டெனெட் வெளியான தினத்தன்று எனது மாமியார் குறித்து இதயப்பூர்வமான குறிப்பை எழுதியுள்ளார். அவர் இருந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அந்த பிரம்மிப்பில் அங்கிருந்து நகர்ந்திருக்கவே மாட்டேன். இந்தப் படத்தில் டிம்பிள் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இதைப் பார்க்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கிறிஸ்டோபர் நோலன் டிம்பிளுக்கு எழுதியுள்ள குறிப்பில், "உங்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. உலெங்கிலும் பிரியாவை உயிர்பித்தற்கு பெருமை அடைகிறேன். உங்கள் திறமையும் கடின உழைப்பையும் 'டெனெட்' படத்திற்கு வழங்கியதற்கு நன்றி" எனப் பராட்டியுள்ளார்.