மலையாளத்தில் ஜெய்சூர்யா - அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் உருவாகியுள்ள சுஃபியும் சுஜாதாயும் (Sufiyum Sujatayum) திரைப்படம் ஜூலை மூன்றாம் தேதி அமேசன் பிரைமில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இசை கலந்த காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் அதிதி ராவ், வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார்.
இப்படம் குறித்து சமீபத்தில் அதிதி ராவ் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் டிஜிட்டல் தளத்தில் படங்கள் வெளியாவது குறித்தும் திரையரங்கில் படங்கள் வெளியாவது குறித்தும் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். மேலும், அதிதி ராவ் திரைத்துறையில் இருக்கும் காஸ்டிங் கோச் கொடுமைகள் குறித்தும் அவற்றை களை அறுப்பதை குறித்தும் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். பாலிவுட் திரைத்துறையில் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரையாடல் தொடங்கும் முன்பே காஸ்டிங் கோச் குறித்து அதிதி ராவ் குரல் எழுப்பினார்.
இது குறித்து அதிதி ராவ் கூறுகையில், "காஸ்டிங் கோச் கொடுமைகளை நான் அனுபவித்ததில்லை. என்னுடன் பணியாற்றும் சிலர் அதை அனுபவித்துள்ளனர். அது ஒரு மோசமான சூழ்நிலை. இந்தக் கொடுமையிலிருந்து ஒரு சிலர் எந்த பிரச்னையுமின்றி வெளியேறிவிட்டனர். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இதுவரை அந்த கொடுமைகளை எதிர்கொள்ளவில்லை" என்றார்.