மும்பை: கடந்த பத்து ஆண்டில் நடந்தவற்றை தசாப்தமாக குறிப்பிட்டு பலரும் இந்த ஆண்டை வரவேற்றிருக்கும் நிலையில், பாலிவுட் நடிகை அடா ஷர்மா, #100yearsofAdahSharma என்ற ஹேஷ்டாக்கில் வேடிக்கையான வீடியோவை வெளியிட்டு வரவேற்றுள்ளார்.
கடந்த 2008இல் வெளியான '1920' என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அடா ஷர்மா. 2020ஆம் ஆண்டு அடுத்த தசாப்தத்தின் தொடக்கமாக இருப்பதால், பலரும் கடந்த 10 ஆண்டுகள் தாங்கள் கடந்து வந்த பாதையை புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு வருகின்றனர்.
இதையடுத்து '1920' படத்திலிருந்து தற்போதைய 2020ஆம் ஆண்டை கணக்கெடுத்து சினிமாவுக்கு வந்து 100 ஆண்டுகள் ஆகியருப்பதாக #100yearsofAdahSharma ஹேஷ்டாக்குடன் தனது சமூக வலைதளபக்கத்தில் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார் அடா ஷர்மா.
'காலம் வேகமாக கடக்கிறது. #1920to2020 வரை என 100 வருடங்கள் நேரம் மிக வேகமாக சென்றுள்ளது. எனவே நீங்கள் விரும்பும் நபரிடம் உங்களை பிடித்திருக்கிறது என்று கூறுங்கள். (அந்த நபர் உங்களை பிடிக்கவில்லை என்று சொன்னால், எதுவும் அவரிடம் பேசாதீர்கள். உங்களது உணர்வுகளை எரித்துவிட்டு பூந்தி ரைத்தா சாப்பிடுங்கள்), சும்மா விளையாட்டாக கூறினேன். நீங்கள் சைவ பிரியராக இருந்தால் பாவ் பாஜியும் சாப்பிடுங்கள்' என்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது வைரலானது.
மேலும், 'நல்ல மனிதராக இருங்கள். கருணை உள்ளவராக இருப்பது மதிப்பு குறைவாக பார்க்கப்படுகிறது. நல்ல மனிதராக இருந்தால் என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று நீங்கள் எண்ணினால், உங்களை நான் நல்லவர் என்று சொல்லப்போவதில்லை. அச்சம் இல்லாமல் நிகழப்போகும் மாயாஜாலத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று தத்துவம் ததும்ப கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் வேடிக்கையான வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், இளமை முதல் முதுமைவரை தனது தோற்றத்தை காட்டும் விதிமாக பதிவுசெய்துள்ளார்.
தற்போது வித்யூத் ஜாம்வால் ஜோடியாக 'கமாண்டோ 3' படத்தில் நடித்து வரும் அடா ஷர்மா, அதன் அடுத்த பாகத்திலும் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மேன் டு மேன், தி ஹாலிடே சீசன் 2 ஆகிய வெப்சீரிஸிலும் தோன்றவுள்ளார்.