பெங்காலி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நுஸ்ரத் ஜஹான். இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராவார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பஸிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு மூன்று லட்சம் வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் பெற்ற வாக்குகள் அரசியல் வட்டாரத்தில் பலரையும் வியக்க வைத்தது.
நுஸ்ரத் ஜஹான் திரிணாமுல் காங்கிரஸில் இளம்பெண் எம்பியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு ஜூன் 19ஆம் தேதி தொலில் அதிபர் நிகில் ஜெயினை துருக்கியில் ஜெயின் சமூக முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் முடிந்த ஒருவாரத்தில் ஜூன் 25ஆம் தேதி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவர், தலையில் குங்குமம், கையில் வளையல், தாலி புடவை என மணப்பெண் கோலத்தில் இருந்தார்.
இந்நிலையில், நுஸ்ரத் ஜஹான் இஸ்லாமிய விதிமுறைகளை மீறியதாக இஸ்லாமிய மதகுருக்கள் அவரை இஸ்லாம் மதத்தை விட்டு விலக்கி வைப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு நுஸ்ரத் ஜஹான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். இதில், 'சாதி, மதம், இனம் ஆகிய எல்லைகளை கடந்த இந்திய மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இப்போதும் நான் இஸ்லாமியராகத்தான் இருக்கிறேன். இஸ்லாம் மதக் கோட்பாடுகளைத்தான் கடைப்பிடிக்கிறேன். தற்போது, மதச்சார்பற்ற இந்தியாவின் மகள் நான்.
நான் என்ன ஆடை உடுத்த வேண்டும், எவ்வாறு நடக்க வேண்டும் என்று என்னை கட்டுப்படுத்த வேண்டாம். மதம் என்ற பெயரில் பிரிவினையை ஏற்படுத்துவதை ஏற்கமாட்டேன். என் மனம் செல்லும் வழியில் நான் செல்கிறேன். மதத்தின் பெயரால் என்னை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது என்வாழ்க்கை அதை நான்தான் முடிவு செய்யவேண்டும்' என பதிலடி கொடுத்துள்ளார்.