இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் பல கரோனா நோயாளிகள் உயரிழந்துள்ளனர். இதனைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், 'காலா' பட நடிகை ஹூமா குரேஷி டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில், ஆக்ஸிஜன் கருவியுடன்கூடிய 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, "டெல்லியில் கரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராடும்விதமாக நான் 'சேவ் தி சில்ட்ரன்' என்ற அமைப்புடன் கைக்கோர்த்துள்ளேன். அதன்படி, தற்காலிக மருத்துவமனை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதில் ஆக்ஸிஜன் கருவிகளுடன் 100 படுக்கை வசதிகள் அமைக்கபடவுள்ளன.
மேலும் வீட்டிலிருக்கும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவக் கருவிகள் வழங்கப்படும். இதில் ஒரு மருத்துவர், ஒரு உளவியல் ஆலோசகர் இருப்பர். அவர்கள் நோய்தொற்று பாதித்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பர். இந்த முயற்சிக்கு ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் பங்களிப்பை செலுத்தவேண்டும். உங்களால் முடிந்த நன்கொடைகளை அளியுங்கள், டெல்லியை மீண்டும் நாம் சுவாசிக்க வைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹூமா குரேஷியின் இந்த வேண்டுகோளை ஏற்று பல பிரபலங்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.