கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்தே திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல திரைபிரபலங்கள் எதிர்பாராத விதமாக பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். குறிப்பாக நடிகர் சேதுராமன், சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்றோர் மிகச் சிறிய வயதில் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், 'மிகுந்த துயரமான நாள்களாக இந்த சில நாள்கள் கடந்து போகின்றன. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புட் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள்.
இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. இதனை சினிமாவிற்கான இழப்பாக பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக்கொள்கிறேன்.
இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதை நான் அறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக்கொண்டே இருக்கும்.
கரோனா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல். கரோனாவின் பாதிப்பில் மரணம் ஏற்பட்ட குடும்பங்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் 'தில் பேச்சுரா' இசைப்புயலின் வேண்டுகோள் போல, அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் இதுவே.