ஆமிர்கான் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிவரும் படம் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட்டில் 1994ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ஃபாரஸ் கம்ப் படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் கரீனா கபூர், விஜய்சேதுபதி, மோனா சிங், பங்கஜ் திரிபாதி, மானவ் கோலி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆமிர்கான் நடிப்பில் 2018ஆம் ஆண்டு தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படம் வெளியாகியிருந்தது. இந்தப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆமிர்கான் நடிப்பில் 'லால் சிங் சத்தா' படம் வெளியாகவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பஞ்சாப், மும்பை, தமிழ்நாடு, கேரளா, கோவா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதன் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்றன.
ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் வையகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை பிரபல இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்குகிறார். இந்தப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.