ஷாருக் கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகி இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த காதல் காவியம் ’தில்வாலே துல்ஹனியா லே ஜாயிங்கே’. ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
’டிடிஎல்ஜே’ என சுருக்கமாகவும் செல்லமாகவும் ரசிகர்களால் அழைக்கப்படும் இந்தத் திரைப்படம், பாலிவுட் தாண்டி அனைத்து இந்தியர்களின் வீடுகளையும் சென்றடைந்து, அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடித் தீர்த்த ஒரு படமாகவே இன்று வரை விளங்கி வருகிறது.
தான் நேரில் பார்த்திராத இந்தியர் ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட லண்டன் வாழ் இந்தியப் பெண்ணான சிம்ரன், திருமணத்திற்கு முன் தன் நண்பர்களுடன் ஐரோப்பிய சுற்றுலா செல்ல விரும்பி வீட்டில் அனுமதி பெற்று கிளம்புகிறார். அங்கு மற்றொரு லண்டன் வாழ் இந்தியரான ராகுலை சந்திக்கிறார். பிறகென்ன? மோதலில் தொடங்கி ராகுலுடன் காதல் பிறக்கிறது.
தொடர்ந்து சுற்றுலாப் பயணம் முடிந்து தங்களது நிஜ வாழ்க்கைக்கு திரும்பும் இருவரும் மீண்டும் எவ்வாறு சந்திக்கிறார்கள்? எங்கே சந்திக்கிறார்கள்? இருவரும் இணைந்தார்களா என்பதை இளமை பொங்க விவரித்திருக்கும் இந்தத் திரைப்படம், வெளியான காலகட்டம் தொடங்கி இன்றுவரை, இளைஞர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வருகிறது.
ஏற்கனவே பார்த்து சலித்த கிளிஷே கதையாக தோன்றத்தான் செய்யும். ஏனெனில், கடந்த 25 ஆண்டுகளில் வெளியான பல காதல் கதைகளுக்கும் இப்படமே தொடக்கப் புள்ளியாக அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
”இந்திய சினிமா வரலாற்றில் நீண்ட காலம் திரையரங்கில் ஓடிய திரைப்படம்” எனும் டிடிஎல்ஜேவின் சாதனையை வேறு எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் அவ்வளவு எளிதாக முறியடித்துவிட முடியாது. மும்பையில் உள்ள ’மராத்தி மந்திர்’ திரையரங்கில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு இந்தப் படம் ஓடித் தீர்த்தது. பெரும்பாலான காட்சிகளில் திரையரங்கின் இருக்கைகள் முழுவதுமாக நிரம்பி இருந்ததே இப்படத்திற்கு மக்கள் அளித்த வரவேற்பிற்கான சான்று.
என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் காதலை அழகுறப் படமாக்கி ஒருபக்கம் இப்படம் ’ட்ரெண்ட்செட்’ அமைத்துக் கொடுத்தது என்றால், மக்களின் மனதுக்கு மேலும் நெருக்கமாக இப்படம் மாறியதற்கு மற்றுமொரு காரணம் அதன் இளமை ததும்பும் பாடல்கள்! ஜதின்-லலித் இணையரால் கம்போஸ் செய்யப்பட்ட இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும், மென்மையான காற்றைப் போல நம்மை வருடிச் செல்ல இன்றளவும் மறப்பதில்லை!