வாஷிங்டன்:கடந்த 2020ஆம் ஆண்டு குறுஞ்செய்தி குறிப்பிட்ட காலத்தில் அழிந்துவிடும் வசதியான ‘Disappearing messages' என்கிற வசதியைக் கொண்டு வந்த வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அதற்கும் அடுத்தகட்ட வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
அதாவது, இதுவரை 7 நாட்களில் குறுஞ்செய்திகள் அழியும்படி இருந்த வசதி இனி 24 மணிநேரம் அல்லது 90 மணி நேரங்களில் அழிந்து விடும் வசதியாக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வசதி மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தியைப் பெறுநரால் ஒருமுறை பார்க்க மட்டுமே முடியும், அதை எவருக்கும் ஃபார்வர்டு செய்யவும் முடியாது.
இது போன்ற ஒரு வசதியை வாட்ஸ்அப் ஏற்கெனவே புகைப்படம் மற்றும் காணொலி அனுப்புவதில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் அனுப்பப்படும் புகைப்படங்களை பெறுநர் தனது மொபைலில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது.
அதைப் போலவே இந்த வசதியின் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளையும் பெறுநர் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது. போட்டோ, வீடியோவை ஒரு முறை பார்க்கும் படி அனுப்ப வாட்ஸ்அப்பில் ’1’ என்கிற ஐகானை தேர்வு செய்வது போலவே இனி அனுப்பும் குறுஞ்செய்திக்கும் தேர்வு செய்துகொள்ளலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் அமலுக்கு வந்தது ட்விட்டர் "ப்ளூ டிக்"; ட்வீட்களின் எழுத்து வரம்பு அதிகரிப்பு