ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்11 (IPhone11) ரகங்களை அந்நிறுவனத்தின் தலைமை செயல்அலுவலர் டிம்குக் நாளை (செப். 10) வெளியிட இருக்கிறார். கலிஃபோர்னியாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, முதன்முறையாக இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு யூ ட்யூபிலும் நேரடி ஒளிபரப்பு (Apple Live) செய்யப்படவுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயில், கைப்பேசி விற்பனை மூலம் கிடைக்கும் தொகை பெரும்பங்கு வகிக்கிறது. இச்சூழலில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தடம்பதிக்க இந்தப் புதிய கைப்பேசி ரகங்கள் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் எதிர்ப்பார்க்கப்படும் புதிய ஐ-போன் நடப்பு ஆண்டில் மூன்று ஐபோன் ரகங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐபோன்11 (IPhone11), ஐபோன்11 புரோ (IPhone11 Pro), ஐபோன்11 புரோ மேக்ஸ் (Iphone Pro Max) ஆகியன இந்நிகழ்வில் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபோன்11 ஆர் (IPhone11 R) அல்லது ஐபோன்11 ரகங்களில் ஐ.ஓ.எஸ். 13 (IOS 13) இயங்குதளம் பயன்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அதில் 3854 எம்.பி. ரேம் (MB RAM), 512 ஜிபி (Giga byte) வரையிலான சேமிப்புத்திறன், 3,110mAh மின்கலம் (பேட்டரி), 12 மெகாபிக்சல் கேமரா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று ஐபோன்11 புரோ மற்றும் ஐபோன்11 புரோ மேக்ஸ் மாடல் ஃபோன்கள் இதே தொழில்நுட்பத்துடன் 5.8 இன்ச், 6.5 இன்ச் ஓ-லெட்(OLED) தொடுதிரை கொண்டிருக்கலாம் என்றும் மூன்று கேமராக்களுடன் வெளிவரலாமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபோன்11 எல்.சி.டி. ரகத்தின் விலை தோராயமாக 53 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் ஓ-லெட் ரகத்தின் விலை 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன்கள் மட்டுமின்றி புதிய செராமிக், டைட்டானியம் ரக ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகளும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.