சான் பிரான்சிஸ்கோ(அமெரிக்கா): ட்விட்டருக்கு போட்டியாக சமூக வலைதள உலகில் கால்பதித்துள்ள த்ரெட்ஸ், தொடங்கப்பட்ட 5 நாட்களில் 10 மில்லியன் பயனாளர்களை எட்டியுள்ளது. ட்விட்டர் மற்றும் த்ரெட்ஸ் இடையே ஒத்துப்போகும் பல காரணிகள் உள்ள நிலையில் மெட்டா நிறுவனம், ட்விட்டரின் நகலைத் திருடி த்ரெட்ஸை உருவாக்கியுள்ளதாக அதன் தலைவர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இது தொடர்பாக மார்க் ஜுக்கர்பெர்க் மீது வழக்குத் தொடரவுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள எலான் மஸ்க் ஒட்டு மொத்த பயனாளர்களின் ட்விட்டர் ஸ்கிரீனிங் நேரம் இந்த வாரத்தில் அதிகம் பதிவாகி சாதனைப் படைத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த ட்விட்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்விட்டர், நிறுவனத்தின் தலைமை அதிகாரி யாக்காரினோ 'ட்விட்டருக்கு இணை ட்விட்டர் தான்' எனவும்; 'ட்விட்டரை திருடலாம்; ட்விட்டர் சமூகத்தை திருட முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'இந்த தகவலை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை; உங்களுக்கு ஏற்கனவே தெரியும்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபக்கம் இருக்க அமெரிக்காவின் தொழில் நுட்ப சேவை மேலாண்மை நிறுவனமான கிளவுட்ஃப்ளேரின் சிஇஓ மேத்யூ பிரின்ஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் தகவலை குறிப்பிட்டுள்ளார். இது மெட்டா நிறுவனத்தின் 'த்ரெட்ஸ்' அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மேலும் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. இதற்குப் பதிலளித்துள்ள யாக்காரினோ, 'ட்விட்டர் பலராலும் பின்பற்றப்படும் நிலையில், ஒருபோதும் வீழ்ச்சி அடையாது என்பதில் உறுதியாக உள்ளோம்' என்ற வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.