சான் பிரான்சிஸ்கோ: டெஸ்லாவின் முதன்மைச் செயல் அதிகாரியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை முழுமையாக விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 விழுக்காடு பங்குகளை வாங்கிய மஸ்க், 100 விழுக்காடு பங்குகளையும் வாங்க விருப்பம் தெரிவித்தார்.
அந்த வகையில், ஒரு பங்கை 54.20 டாலருக்கும், மொத்த பங்கை 41 பில்லியன் டாலருக்கும் வாங்க முன்வந்துள்ளார். இந்தத் தொகை இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். இந்த நிலையில், ட்விட்டரை விற்பது தொடர்பாக அந்நிறுவனத்தின் 11 பேர் கொண்ட குழு எலான் மஸ்கிடம் இன்று (ஏப். 25) பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் உடன்பாடு ஏற்பாட்டால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க காரணம் என்ன..?
தனது ட்விட்டர் கணக்கில் 8.3 கோடி ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள மஸ்க் ட்விட்டரில் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க முடிவதில்லை என்று கருத்து தெரிவித்துவருகிறார். இந்த சூழலிலேயே, ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 விழுக்காடு பங்குகளை வாங்கியிருந்தார். இதுகுறித்து அவர், "நான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை.
பயனர்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க அங்கீகாரம் அளிப்பதற்காக வாங்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். இதனை ட்விட்டர் பயனர்கள் கொண்டாடிவருகின்றனர். இதனிடையே அமெரிக்க நாளிதழ்கள், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினால், அதில் குறிப்பிட்ட மாற்றங்களையெல்லாம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியிட்டன.