ஹெவி-லிப்ட் ராக்கெட் வகைகள்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்ட முயற்சித்து வருகிறார். அதற்காக அவர் முன்மாதிரி ஹெவி-லிப்ட் ராக்கெட் வகைகளான எஸ்என் 8, எஸ்என் 9, எஸ்என் 10 விண்கலன்களை உருவாக்கினார். அவற்றில், முதல் இரண்டு விண்கலன்கள் சோதனை முயற்சியின் போது வெடித்து சிதறின.
அதனால், மூன்றாவதாக உருவாக்கப்பட்ட எஸ்என் 10 விண்கலம் நேற்று (மார்ச்3) டெக்சாஸில் உள்ள போகா சிக்கா ராக்கெட் ஏவுதளத்தில் சோதனையிடப்பட்டது. இந்தச் சோதனையில் எஸ்என் 10 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டப்பின், தரையிறக்கப்பட்டது.
ஆனால், தரையிறக்கப்பட்ட சில நிமிடங்கள் அந்த விண்கலம் வெடித்து சிதறியது. இதுகுறித்து எலான் மஸ்க் "முதல் இரண்டு விண்கலங்கள் தரையிறங்குவதற்கு முன்னதாகவே வெடித்து சிதறின. இருப்பினும், மூன்றாவது விண்கலம் தரையிறக்கப்பட்டப் பின்புதான் வெடித்தது. இதனை ஒரு வெற்றியாகவே பார்க்கத்தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்
ஸ்பேஸ் எக்ஸ்
எலான் மஸ்கின், இந்த ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிக மதிப்புமிக்க தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட பால்கன்-9 ராக்கெட்கள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்கள், அவர்களுடன் உணவுப் பொருள்களும் அனுப்பப்படுகிறது. அதற்காக அமெரிக்காவின் நாசா, இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
முன்னதாக, பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட டிராகன் விண்கலத்தில், நாசாவின் விண்வெளி வீரர்கள் 3 பேருடன் ஜப்பான் விண்வெளி வீரர் ஒருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக சென்றுள்ளனர். மேலும் இதேபோல இந்த ஆண்டும் அதிக பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஸ்பேஸ் எக்ஸ் கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலன்களையும், மனிதர்களையும் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அதற்காக பெருமளவு பணத்தை இந்நிறுவனம் ஒதுக்கிஉள்ளது. அதன்படி எலான் மஸ்க், 2023ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். அதற்கான முன்மாதிரி விண்கலன்கள்தான் இந்த ஹெவி-லிப்ட் ராக்கெட் வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பில் கேட்ஸை ஓவர் டேக் செய்த எலான் மஸ்க்!