பெங்களூரு:சந்திரனில் ஆய்வு மேற்கொள்வதற்கான இஸ்ரோவின் 3-வது செயற்கைக்கோள் சந்திரயான்-3 புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து நிலவின் ஈர்ப்பு விசைக்கு வெற்றிகரமாகக் கொண்டு செல்லப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த ஜூலை 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 செயற்கைக்கோள் வரும் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
சந்திரயான்-3 ஏவப்பட்டது முதல் நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும் வரை அதனை பத்து கட்டங்களாகக் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள சம ஈர்ப்பு விசைப் புள்ளியில் இருந்து, அதாவது நிலவில் இருந்து சுமார் 62,630 கி.மீ தொலைவில் இருந்து நிலவின் ஈர்ப்பு விசை பகுதிக்கு சந்திரயான்-3 விண்கலத்தை உந்துதல் மூலம் கொண்டு செல்லும் ஆறாம் கட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது.
சற்று தவறினாலும், விண்கலம் சுற்று வட்டப்பாதை மாறி சென்று விடும் என்ற இக்கட்டான நிலையை, தற்போது கடந்து உள்ள நிலையில் சந்திரயான்-3 நிலவின் வட்டப்பாதையில் பயணிப்பதற்கான கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து விண்கலத்திற்கு அடுத்தடுத்து உந்துதல் கொடுக்கப்பட்டு நான்கு கட்டங்களையும் முடித்துக்கொண்டு வரும் 23ஆம் தேதி சந்திரயான்-3 விண்ணில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதியளித்து உள்ளனர்.
சந்திராயன் 2-ல் ஏற்பட்ட சில தோல்விகளை சரி செய்து அதனுடன் மேலும் பல தொழில்நுட்ப செயல்பாடுகளை உறுதி செய்து சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த சந்திராயன் 3 திட்டத்தின் நோக்கம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை சாஃப்ட் லேண்டிங் மூலம் தரையிறக்கி, அங்கு ரோவர் எனப்படும் சிறிய வகை ரோபோ மூலம் ஆய்வு செய்வது தான் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இந்த சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியவுடன் 6 சக்கரங்களை கொண்ட ரோவரை வெளியே அனுப்பி, சந்திரனில் தனது பணியை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அப்படி தரையிரங்கும் ரோவர், சந்திரனின் மேற்பரப்பை படம் பிடித்து வரைபடமாக மாற்றி பூமிக்கும் அனுப்பும் எனவும், நிலவின் வெளிப்புறம் எப்படி இருக்கிறது அதன் வடிவம் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யும் எனவும் கூறப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி, இந்த ரோவர், நிலவில் உள்ள புவியியல், கனிம வளம் மற்றும் கலவை பற்றிய விலைமதிப்பற்ற அறிவியல் பூர்வமான தரவுகளை சேகரிக்கவுள்ள நிலையில், நிலவில் நீர்மூலக்கூறுகள் இருப்பதை ஆராய்வது உள்ளிட்ட பல்வேறு தரவுகளை சேகரித்து வழங்க உள்ளது.
மேலும், சந்திரனின் பரிணாமம், அதன் புவியியல் செயல்முறைகள் மற்றும் எதிர்கால மனிதப் பணிகளுக்கான ஆதாரம், அதன் திறனைப் பற்றிய மனிதர்களின் புரிதல் உள்ளிட்டவை இதன் மூலம் மேம்படும் என நம்புவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:chandrayaan 3: உலகம் உற்றுநோக்கும் இந்திய சரித்திரம்.. சந்திரயான் - 3 குறித்த முழு விபரம்!