சான் ப்ரான்சிஸ்கோ:பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளமானது உலகிலேயே அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது. பல பயனாளர்கள் அவர்களது நெட்ப்ளிக்ஸ் கணக்குகளின் பாஸ்வேர்ட்களை பலருக்கு பகிர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கடவுச்சொல் பகிர்வைத் தடுக்கும் விதமாக 'சுயவிவரப் பரிமாற்றம்' அம்சத்தை அதன் தளத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் உங்கள் நண்பர்களின் அக்கவுண்ட் மூலம் இதுவரை நெட்பிளிக்ஸ் பார்த்து வந்த நீங்கள், உங்கள் சொந்த அக்கவுண்ட்டுக்கு மாறும் போது, பழைய சேவ் செய்யப்பட்ட கேம்கள், படங்கள், வெப்சீரிஸ்களின் பரிந்துரைகளை இழக்காமல் அப்படியே பெறலாம்.
மேலும் இந்த அம்சமானது உலகளவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவான ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் கணக்கில் அவர்களது நண்பர்களை சேர்க்கத் தொடங்கும் போது, அவர்களின் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், பார்க்கும் வரலாறு, சுயவிவர பட்டியல், கேம்கள் மற்றும் பிற விருப்பத்தேர்வுகள் (My List, saved games, viewing history, and personal settings) உள்ளிட்டவற்றை புதிய கணக்கிற்கும் மாற்ற அனுமதிக்க இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.