வாஷிங்டன்:பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறுகோள்களும் உள்ளன. அந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இதுபோன்று விண்கற்கள் பூமி மீது மோதுவதாக இருப்பின், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அந்த வகையில் நாசா விஞ்ஞானிகள் DART (Double Asteroid Redirection Test) என்னும் திட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திட்டம் மூலம் பூமிக்கு அருகில் விண்வெளியில் சுற்றிவரும் டிமார்போஸ் (Dimorphos) என்னும் சிறிய விண்கல் மீது ஒரு விண்கலனை மோத விடப்படும். அந்த மோதலின் காரணமாக டிமார்போஸ் விண்கல்லின் சுற்றுவட்டப்பாதையில் ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்படும். அப்படி விண்கல்லின் சுற்றுவட்டப்பாதையில் மாற்றம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கல்லிலும் இதேபோல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.