தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

பூமியும், உயிர்களும் உருவானது எப்படி.? 'பென்னு' எரிகல் மூலம் பதில் கிடைக்குமா?

பூமியும், உயிர்களும், இயற்கை ஆதாரங்களும் உருவானது எப்படி என்ற நாசா விஞ்ஞானிகளின் ஆய்வுக்குப் பதில் கூற, 7 ஆண்டு பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பி இருக்கிறது ஒசரிஸ்-ரெக்ஸின் கொள்கலன்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 5:56 PM IST

Updated : Sep 25, 2023, 11:04 PM IST

பூமிக்கு திருபிய ஒசரிஸ்-ரெக்ஸின் விண்கலம்

அமெரிக்கா: பூமி எப்படி உருவானது.? உயிர்கள் எப்படி உண்டானது.? கடல் மற்றும் காற்று எங்கிருந்து வந்தது.? அத்தனையும் இயற்கையின் படைப்பு என ஒற்றை வரியில் விளக்கி விடும் நாமும் விஞ்ஞான ரீதியான கேள்விகளுக்கு விடை தெரியாமல் குழம்பிப்போய் தானே இருக்கிறோம். அதே குழப்பமும், அதனால் ஏற்பட்ட ஆர்வமும்தான் நாசா விஞ்ஞானிகளின் ஆய்வுக்குத் தூண்டுதலாக இருந்துள்ளது.

இது குறித்து அறிந்துகொள்ளும் நோக்கத்தில் நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து சுமார் 200 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'பென்னு' (Bennu) எனும் சிறுகோளில் இருந்து மண்ணை எடுத்து வந்து ஆய்வு செய்யத் திட்டமிட்டனர்.

பென்னு எரிகல்

அதன்படி இதற்கான முதற்கட்ட முயற்சி கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், ஒசைரிஸ்-ரெக்ஸ் என்ற ஆய்வுக்கலனை விண்ணில் ஏவியது நாசா. பென்னு எரிகல்லைச் சென்றடைய இந்த ஆய்வுக்கலன் இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட நிலையில் அங்கிருந்து கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வின்கலன் மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குத் திரும்பியிருக்கிறது.

நாசாவின் கொள்கலன்

ஆய்வுக்கலன் பென்னுவில் மண்ணை சேகரிக்க ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட திட்டம்; ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலத்தை பென்னுவின் தரைவரை மெதுவாக தரையிறக்கி அங்கிருந்து விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த 10 அடி நீளமுள்ள கை போன்ற உபகரணத்தை உள்ளே செலுத்தி அங்கு நைட்ரஜன் வாயுவை வெடிக்கச் செய்து மண் மாதிரியை எடுத்துவருவதே திட்டமாக இருந்துள்ளது.

ஆனால், ஆராய்ச்சியாளர்களை குழப்பம் அடையச்செய்யும் வகையில் பென்னுவின் தரைப்பகுதி திரவம்போல் இருந்துள்ளது. தொடர்ந்து நைட்ரஜனின் அழுத்தம் காரணமாகச் பென்னுவின் தரைப்பகுதியில் இருந்து கல்லும், மண்ணும் சிதறியுள்ளன. தொடர்ந்து அந்த மாதிரிகளை அங்கிருந்து சேகரித்த ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் அங்கிருந்து புறப்பட்டு பூமியை நோக்கிப் பயணித்துள்ளது.

ஆய்வகத்தில் கொள்கலன்

இரண்டு ஆண்டுகள் பூமியை நோக்கிப் பயணித்து வந்த ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பூமிக்கு மிக அருகில் வந்த உடன் அதன் கொள்கலனைப் பூமியின் தரையை நோக்கி விடுவித்துள்ளது. அந்த கொள்கலன் விநாடிக்கு சுமார் 12 கிலோ மீட்டர் அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 43 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கிச் சீறிப் பாய்ந்துள்ளது. 250 கிராம் மண் மாதிரிகளைச் சுமந்துகொண்டு வந்த அந்த விண்கலம், திட்டமிட்டபடி அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

இந்த மண் மாதிரிகள் டெக்சாஸில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது. இந்த மண் மாதிரியை முதன் முதலாகத் தொடும் வாய்ப்பை, லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆஷ்லி கிங் பெற்றுள்ளார். இவருடன் இணைந்த மேலும் பல ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த ஆய்வில், பூமிக்கும், பென்னுவுக்கும் இடையே இருக்கும் வேதியியல் ஒற்றுமை குறித்தும், பென்னுவில் இருக்கும் நீர் ஆதாரத்திற்கும் பூமியில் உள்ள பெருங்கடல் நீருக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் பூமியில் உயிர்கள் உருவானது எப்போது, எப்படி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான விடை இந்த ஆராய்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி கொள்கலனை விடுவித்து விட்டு ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் எங்கே சென்றது என்ற கேள்வி எழுகிறதா.? தனக்கு வழங்கப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அடுத்த இலக்கான அபோஃபிஸ் என்ற மற்றொரு எரிகல்லைச் சந்திக்கப் புறப்பட்டிருக்கிறது. மீண்டும் புதிய மைல்கல்லை எட்டி 2029ஆம் ஆண்டு நல்ல செய்தியுடன் அறிவியல் ஆர்வலர்களைச் சந்திக்க வரும் ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம்.

இதையும் படிங்க:'நமஸ்தே' - எலான் மஸ்கின் மனித வடிவிலான ஆப்டிமஸ் ரோபோ!

Last Updated : Sep 25, 2023, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details