சான் பிரான்சிஸ்கோ: பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை மெட்டா என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில், இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் புளூ டிக் பெறுவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புளூ டிக்கை பெறுவதற்கு இணையப் பயனர்கள் மாதத்திற்கு 11.99 டாலர்களும் (தற்போதைய இந்திய மதிப்பில் 991.22 ரூபாய் வரை), ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்கள் மாதத்துக்கு 14.99 டாலர்களும் (தற்போதைய இந்திய மதிப்பில் 1239.21 வரை) செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கட்டணம் செலுத்தும் முறையானது இந்த வாரம் முதல் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும், அதன் பிறகு மற்ற நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதற்குக் காரணம், சமூக வலைத்தளங்களில் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களுக்கு அதிகளவிலான பாதுகாப்பு வழங்குவதே எனவும் மார்க் கூறியுள்ளார்.