தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம்... தமிழ்நாட்டில் தெரியுமா..? - மத்திய புவி அறிவியல் அமைச்சகம்

வரும் நவம்பர் 8ஆம் தேதி அன்று முழு சந்திர கிரகணம் நிகழும் என்றும் இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் கிரகணம் தெரியும் என்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Total Eclipse of the Moon on november 8th 2022
Total Eclipse of the Moon on november 8th 2022

By

Published : Nov 6, 2022, 3:03 PM IST

டெல்லி: இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழும். சந்திரன் உதிக்கும் நேரத்தில் இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் கிரகணம் தெரியும். இருப்பினும், கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு வடிவ நிலைகளை இந்தியாவின் எந்தப்பகுதியில் இருந்தும் காண இயலாது. ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவு நாட்டின் கிழக்குப் பகுதிகளிலிருந்து காண முடியும். நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து பகுதி வடிவ நிலைகளின் முடிவு மட்டுமே தெரியும்.

இந்த கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் தெரியும். இந்திய நேரப்படி 14 மணி 39 நிமிடத்தில் கிரகணம் தொடங்கும். முழு கிரகணம் இந்திய நேரப்படி 15 மணி 46 நிமிடத்தில் தொடங்கும். இந்திய நேரப்படி முழு கிரகணத்தின் முடிவு நேரம் 17 மணி 12 நிமிடங்கள் மற்றும் பகுதி வடிவ நிலைகளின் முடிவு நேரம் 18 மணி 19 நிமிடங்கள்.

கொல்கத்தா மற்றும் கவுகாத்தி போன்ற நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள நகரங்களில், சந்திரன் உதயத்தின் போது, முழு கிரகணத்தின் பல்வேறு வடிவ நிலைகள் நடைபெற்று கொண்டிருக்கும். கொல்கத்தாவைப் பொறுத்தவரை, சந்திரன் உதிக்கும் நேரத்திலிருந்து இறுதி வரையிலான மொத்த கால அளவு 20 நிமிடம் மற்றும் சந்திர உதய நேரம் முதல் பகுதி கிரகணம் முடியும் வரை 1 மணி 27 நிமிடம் ஆகும்.

கவுகாத்தியைப் பொறுத்தவரை, சந்திரன் உதிக்கும் நேரத்திலிருந்து இறுதி வரையிலான மொத்த கால அளவு 38 நிமிடங்களாகவும், சந்திர உதயம் முதல் பகுதி கிரகணம் முடியும் வரை 1 மணி 45 நிமிடங்களாகவும் இருக்கும். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பிற நகரங்களில், சந்திரன் உதயத்தின் போது, முழுமையும் முடிந்த பிறகு பகுதி கிரகணம் நடந்து கொண்டிருக்கும். மேற்குறிப்பிட்ட நகரங்களில், சந்திரன் உதிக்கும் நேரம் முதல் பகுதி கிரகணம் முடியும் வரை முறையே 50 நிமிடம், 18 நிமிடம், 40 நிமிடம் மற்றும் 29 நிமிடம் இருக்கும்.

இந்தியாவில் இருந்து அடுத்த சந்திர கிரகணம் அக்டோபர் 28, 2023 அன்று பார்க்க முடியும். மேலும் அது ஒரு பகுதி கிரகணம் ஆகும். இந்தியாவில் இருந்து கடைசியாக காணப்பட்ட சந்திர கிரகணம் நவம்பர் 19, 2021 அன்று ஆகும். அது ஒரு பகுதி கிரகணம் ஆகும். சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும். தமிழ் நாட்டின் சென்னையில், சந்திரன் உதிக்கும் நேரம் இந்திய நேரப்படி 17 மணி 39 நிமிடங்கள் என்றும் சந்திர கிரகணத்தை 40 நிமிடங்கள் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:செவ்வாய் கிரகத்தில் விண்கற்கலால் ஏற்பட்ட இரண்டு பள்ளங்கள்... புதிய தகவல்களை அனுப்பிய நாசாவின் இன்சைட் லேண்டர்

ABOUT THE AUTHOR

...view details