இந்தியாவில் நடைபெறும் சைபர் தாக்குதல்கள் குறித்து பிரபல ஆன்ட்டி வைரஸ் நிறுவனமான காஸ்பர்ஸ்கி செக்யூரிட்டி நெட்வொர்க் (கே.எஸ்.என்) புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் 37 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற 52,820,874 சைபர் தாக்குதல்களை காஸ்பர்ஸ்கி ஆன்ட்டி வைரஸ் வெற்றிகரமாகத் தடுத்துள்ளாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் சைபர் தாக்குதல்களில் சர்வதேச அளவில் இந்தியா 27ஆவது இடத்தில் உள்ளது. 2019ஆம் ஆண்டில் கடைசி காலாண்டில் இந்தியா 32ஆவது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் ஆசியா பசிபிக் பிரிவின் மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சரோப் சர்மா கூறுகையில், "2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இரண்டாம் காலாண்டிலும் இதே நிலைதான் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பாக ஆசியா பசிபிக் பகுதியில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன" என்றார்.