பெங்களூரூ:சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த செப்டம்பர் 2ம் தேதி பி.எஸ்.எல்.வி- சி57 செயற்கைகோள் மூலம் ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.
இது, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ துாரம் பயணம் செய்து பூமி மற்றும் சூரியனுக்கு நடுவே அமைந்துள்ள 'எல் 1' எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், ஜனவரி 7ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் 'லெக்ராஞ்சியன்' புள்ளியை சுற்றி நிலைநிறுத்தப்படும் என்று சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 குறித்த முக்கிய தகவலை இஸ்ரோ தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “ ஆதித்யா எல்-1 விண்லத்தின் இரண்டாவது முக்கிய கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) என்ற கருவி செயல்பட துவங்கியுள்ளது.
ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியால் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் உள்ள ஆற்றல் மாறுபாடுகளை ஹிஸ்டோகிராம் விளக்குகிறது” என தெரிவித்து அதனுடைய மாதிரி படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.