கவுஹாத்தி: இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) ஆய்வாளர்கள் பாதுகாப்பான, சிக்கனமான, எளிதான முகக்கவசம் தயாரிக்கும் பூச்சை கண்டுபிடித்துள்ளனர்.
கரோனா காலகட்டங்களில் மக்களிடத்தில் முகக்கவசத்தின் தேவை அதிகரித்தது. முன் காலங்களில் முகக்கவசம் அணிந்தவர்களை பொதுமக்கள் விசித்திரமான மனிதர்களாக பார்த்து வந்தனர்.
ஆனால், இன்றைய சூழலில் முகக்கவசம் அணியாத மனிதர்கள் விசித்திரமாக பார்க்கப்படுகிறார்கள். அந்த அளவிற்கு கரோனா தொற்று நோய், முகக்கவசத்தை மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த முகக்கவசம் பல நோய்களிலிருந்து மக்களை தற்காத்து வந்தாலும், அவற்றை சரியான நேரத்தில் மாற்றவும், முறையாக கையாளவும் மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அனைத்து தரப்பு மக்களாலும் முகக்கவசங்களை அவ்வப்போது மாற்ற முடிவதில்லை. இதற்கான காரணம் முகக்கவசத்தின் விலை தான்.
ஐஐடி கவுஹாத்தி கண்டுபிடிப்பு
தற்போது இதற்கான தீர்வை ஐஐடி கவுஹாத்தி உருவாக்கியுள்ளது. அதாவது பயனற்று இருக்கும் துணிகளைக் கொண்டு முகக்கவசம் தயாரிக்கும் மூல பூச்சுப் பொருளை கண்டுபிடித்துள்ளது. இந்தப் பூச்சுக்கு 'நானோமீட்டர் திக் சூப்பர்ஹைட்ரோஃபோபிக் கோட்டிங்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் துணியிலான முகக்கவசங்கள், காற்றில் பரவும் நுண் தொற்று கிருமிகளை நம் சுவாச பாதையை அண்ட விடாது என இதனை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு இதன் மூலம் சிறந்த தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். உலக சுகாதார மையம் அளித்துள்ள அனைத்து நெறிமுறைகளையும் இந்த பூச்சு பூர்த்திசெய்துள்ளதாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள், குறைந்த செலவில் பொதுமக்களுக்கு முகக்கவசம் கிடைக்க அனைத்து ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத்த, ஐஐடி கவுஹாத்தியின் வேதியியல் துறை மற்றும் நானோ தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் அருண் சட்டோபாத்யாய், "ஒரு துணி முகக்கவசமானது காற்றில் உள்ள் நுண் பொருள்களை உறிஞ்சும் அளவுக்கு பெருமளவு நுண்துளைகள் கொண்டது. இதனால் கோவிட்-19 வகை தொற்றுநோயைத் தடுக்க முடியாது.
என்-95 முகக்கவசத்திற்கு மாற்று
முகக்கவசம் அணியாமல் இருப்பதை விட, அது எவ்வளவோ சிறப்பு என்றாலும், அதன் மேம்பட்ட பதிப்புகள் பொதுமக்களை பெருந்தொற்றுகளில் இருந்து அரணாக காக்கும். முகத்திற்கு காற்றோட்டத்துடன் கூடிய தொற்றுக் கிருமி தடுப்பு துணிக் கவசம் வேண்டும் என்ற எல்கையைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டோம்.
பட்டு துணியில் ஹைட்ரோபோபிக் மூலக்கூறின் எளிய பூச்சு இந்த ஆய்வுகளில் நன்றாக வேலை செய்தது. கேஸ் குரோமடோகிராபி என்ற கருவியின் உதவியுடன் முகமூடியின் மூலம் ஆக்ஸிஜன் ஊடுருவலை அளவிடுவதன் வாயிலாக சுவாசத்திறன் சோதிக்கப்பட்டது.
இயற்கையான Eri Silk முகக்கவசங்களுடன் ஒப்பிடும்போது, மாற்றியமைக்கப்பட்ட எரி பட்டு முகக்கவசமானது ஆக்ஸிஜனின் ஊடுருவல் 22 விழுக்காடு மட்டுமே குறைத்தது. அதேசமயம் என்95க்கு சுமார் 59 விழுக்காடாக இருந்தது.
எனவே, மாற்றியமைக்கப்பட்ட எரி பட்டு முகக்கவசமானது, N95 முகக்கவசத்தை விட சுவாசிக்கக்கூடியதாக உள்ளது. அதே நேரத்தில், காற்றில் உலவும் தொற்று கிருமிகளில் இருந்து என்95 முகக்கவசம் தரும் அதே பாதுகாப்பை தருகிறது," என்று கண்டுபிடிப்பை குறித்து விளக்கமளித்தார்.
இதையும் படிங்க:மிதக்கும் வீட்டை பார்த்திருக்கிறீர்களா - மழை,வெள்ளம் வந்தா கூட ஒண்ணும் பண்ண முடியாது!