"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" என்ற வள்ளுவரின் குரல் வேளாண்மையின் அவசியத்தையும் அதன் பெருமையையும் இன்றளவும் உணர்த்தி உரைத்துச் சொல்கிறது. இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மையை மேலும் வலுப்படுத்திட நவீன காலத்திற்கு ஏற்ப புதிய 'மொபைல் செயலியை' உருவாக்கி விவசாயிகளின் தோழனாக விளங்கும் வகையில் தொழிநுட்பப் புரட்சியை சேலம் பொறியியல் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்திய இளம் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை வெளி உலகத்திற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக ஆண்டுதோறும் மத்திய அரசு 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் திட்டம்' மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தொழில்நுட்ப திறன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வந்து அசத்திவருகின்றனர். இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் வெல்லும் மாணவர்கள் தொழிநுட்ப அறிவில் மிளிரும் புதிய தலைமுறைகளாக இந்தியாவில் வலம் வந்து சிறந்த தொழில் முனைவோராக வளர்ந்துவருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்காக நடத்தப்படும் இந்த போட்டிகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் குழு சார்பில் நடத்தப்படுகிறது.
வன்பொருள், மென்பொருள் என இரண்டு பிரிவுகளில் 344க்கும் மேற்பட்ட நடைமுறை பிரச்னைகளை தீர்வு கண்டு அவற்றில் வெற்றி பெற வேண்டும் என்ற சவால்களை மாணவர்களுக்கு இந்தப் போட்டி மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதில் வேளாண் ஒத்துழைப்பு, உழவர் நலன் சார்ந்த பிரிவுகளில் சேலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்து தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வென்றுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட் விவசாயம் என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பிரச்னைகளின் தீர்வை கண்டுபிடித்து சேலம் அரசு உதவி பெறும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவியர் புதிய மொபைல் செயலியை கண்டுபிடித்துள்ளனர்.
காற்றின் ஈரப்பதத்தை கருவியின் மூலம் கண்டறிந்து, ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது தானியங்கி மோட்டார் மூலமாக மோட்டாரை இயக்கி, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் வகையிலும் பயிரின் நிறம் உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு உரங்களை தானியங்கி முறையில் தெளிக்கவும், இந்த பணிகளை செல்போன் மூலம் கண்காணிக்கும் வகையில் மாணவ மாணவியர் உருவாக்கியுள்ள இந்த நவீன செயலி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததோடு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.