பாட்னா (பீகார்): முதன்முறையாக, இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) பாட்னா கரோனா நோய்க் கிருமிகளை அழிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியா முழுவதும் பல உயிர்களைக் கொன்ற கொடிய வைரஸை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் ஐஐடி பாட்னாவின் இன்குபேஷன் மையத்தில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும். இது பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் (AIIMS) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்று கூறிய இயந்திரத்தை உருவாக்கிய குழு உறுப்பினர்களில் ஒருவரும், ஐஐடி பாட்னா ஆய்வாளருமான வருண் குமார் ஷாஹி, இது மனித உடலில் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.
ஐஐடி பாட்னா கண்டுபிடிப்பு
மனித குலத்துக்காக இப்படியொரு இயந்திரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று ஈடிவி பாரத் செய்தியாளர் வினவ, அதற்கான தனது கருத்தையும் சாஹி பகிர்ந்துகொண்டார்.
"பாட்னா மருத்துவக் கல்லூரியின் 14 மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, மருத்துவர்களின் உயிரைக் காப்பாற்ற இதுபோன்ற ஒரு இயந்திரத்தை உருவாக்கும் யோசனை என் மனதில் தோன்றியது. இந்த இயந்திரத்தின் முக்கிய செயல்பாடு கழுத்துக்கு கீழே முழு உடலில் உள்ள கிருமிகளை அழிப்பதாகும்.
கதவு சட்டங்கள் போல அமைப்பு கொண்ட இந்த இயந்திரம், நீராவியான மருந்தை மட்டுமே ஸ்ப்ரே செய்யும். இதனால் அதிகளவு ரசாயனம் உமிழ்தல் தடுக்கப்படுகிறது. மிக முக்கியமாக, உடலில் உள்ள கிருமிகளை அழிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று ஷாஹி கூறினார்.
பல கட்ட ஆய்வுகள்
சோதனை, மாற்றம், மேம்படுத்தல் போன்ற பல செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், இந்த இயந்திரத்தை உருவாக்க ஒன்பது மாதங்கள் எடுத்ததாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மூன்று மாடல்களில் இந்த இயந்திரத்தை ரூ. 1.5 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரையிலான விலைகளில் உருவாக்கியுள்ளோம். இயந்திரத்தின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் பத்து வருடங்கள் ஆகும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். இந்த இயந்திரத்தின் சிறப்பு என்னவென்றால், பொத்தான் அமைப்பு இல்லை.
குழந்தைகள் பாதுகாப்பு
இருப்பினும், குழந்தைகள் இதனை கடந்து செல்லும் போது இந்த இயந்திரம் வேலை செய்யாது. அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் குழந்தைகளின் தோல் வயதானவர்களை விட ஒப்பீட்டளவில் மென்மையானது, என்று தெரிவித்தார்.
ஐஐடி இன்குபேஷன் மையத்தின் மேலாளர் ஜோசப் பால் கூறுகையில், இந்த மையம் தொழில்நுட்ப ஆதரவை வழங்கியது.மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நலனுக்காக பல புதுமையான யோசனைகளை கொண்டு வர விரும்பும் பல்வேறு நிறுவனங்களுக்கு இன்குபேஷன் சென்டர் ஆதரவை வழங்குகிறது.
பொது சந்தையில் அறிமுகம்
இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் சகஜானந்த் பிரசாத் சிங் பேசுகையில், இதுபோன்ற இயந்திரங்களின் தேவை தற்போது அவசியம். இந்த இயந்திரம் சோதனை முடிந்தவுடன் மருத்துவமனைகள் மட்டுமின்றி பொது இடங்களிலும் நிறுவ நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.
இருப்பினும், இந்த இயந்திரம் இரண்டு நாட்களுக்கு முன்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உற்பத்திக்காக அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த இயந்திரத்தை சந்தைப்படுத்த வேலைகள் நடைபெற்று வருவதாக, ஐஐடி பாட்னா உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க:குப்பையில் புதிய கண்டுபிடிப்பு: சென்னையைக் கலக்கும் இளம் அறிவியலாளர்