கனடாவில் உள்ள மக்கில் பல்கலைக்கழகத்தில் ( McGill University ) வேதியியல் பொறியியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர் நத்தலி துஃபென்கி ( Nathalie Tufenkji ). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள மாண்ட்ரீல் கஃபே ஒன்றில் தேநீர் அருந்துவதற்காக சென்றிருந்தார். அவருடைய குவளையில் நெகிழியால் ஆன டீபேக் வைக்கப்பட்டிருந்தது. இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியது என்று சிந்தித்த நத்தலி துஃபென்கி இது குறித்து ஆராயச்சி செய்ய முடிவு செய்தார்.
பின்னர் அவருடைய மாணவி லாரா ஹெர்னாண்டஸி ( Laura Hernandez ) உதவியுடன் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து நெகிழியால் ஆன சில டீபேக்களை சேகரித்தார். பின்னர் அவற்றை தனது ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்திய போது, அந்தப் பைகள் சூடான தேநீரில் நெகிழித் துகள்களை வெளியிடுவது தெரிந்தது.
இவரோடு மெர்கில் பல்கலைக்கழகத்தின் சக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். கொதிக்கும் நீரில் நான்கு வகையான டீபேக்களை பரிசோதனைக்கு உட்படுத்திய அந்த ஆய்வில் ஒரு டீபேக் 11 பில்லியனுக்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களையும் மூன்று பில்லியன் நானோபிளாஸ்டிக் துகள்களையும் வெளியிடுவது தெரிந்தது. பின்னர் அந்த டீபேக்களை 203 டிகிரி பாரன்ஹீட் வரை சூடேற்றப்பட்ட நீரில் ஐந்து நிமிடங்கள் செங்குத்தாக மூழ்கும் நிலையில் வைத்தனர்.