டெல்லி: சாம் ஆல்ட்மேன் தலைமை ஏற்று நடத்தி வரும் OpenAI நிறுவனம், ஆண்ட்ராய்ட் பயனர்களுக்காக ChatGPT எனப்படும் அதன் மிகவும் பிரபலமான AI சாட்பாட்டை அடுத்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளதாக சனிக்கிழமை (ஜூலை 22ஆம் தேதி) அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
OpenAI என்பது செயற்கை நுண்ணறிவு பற்றி ஆராய்ச்சி செய்து, செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தயாரிப்பு தான் ChatGPT செயலி ஆகும். இதுவும் ஒரு வகையில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த செயலி தான் ஆகும். கூகுள் தேடுபொறி போன்று இங்கு வார்த்தைகளை மட்டுமின்றி முழு கேள்வியாகவே கேட்டு விடையைப் பெறலாம்.
சாட்ஜிபிடியில் ஜிபிடி என்பது Generative Pre-trained Transformer எனும் செயற்கை நுண்ணறிவுச் செயலாக்கம் ஆகும். அதாவது பதிவில் இருக்கும் தகவலை அலசி ஆராய்ந்து, இறுதியாக முழுமையான தகவலைத் தருவது அதன் நோக்கம் ஆகும். ஐபோன்களுக்கான இலவச iOS சாட்பாட் அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு Android பயன்பாட்டிற்கான ChatGPT தொடங்கப்பட உள்ளது. "Android-க்கான ChatGPT பயன்பாடு அடுத்த வாரம் பயனர்களுக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் நீங்கள் இன்று முதல் Google Play Store-ல் முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளலாம்" என்று நிறுவனம், வெளியிட்டு உள்ள ட்வீட் பதிவில் தெரிவித்து உள்ளது.
ஆண்ட்ராய்ட் பயனருக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள ChatGPT செயலி, ஆப்பிள் போனின் iOS ஆப்ஸைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் பயனர்கள், தங்களுடைய எல்லா சாதனங்களிலும் உரையாடல்களையும், விருப்பங்களையும் இணைக்க முடியும். ஆண்ட்ராய்ட் வெளியீடு, முதலில் அமெரிக்கப் பயனர்களுக்கும், பின்னர் பிற நாடுகளுக்கும் வர உள்ளது. OpenAI நிறுவனம், இன்னும் அதற்கான திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடவில்லை. கூகுள் ப்ளே ஸ்டோரில் "முன்பதிவு" என்பதை அழுத்துவதன் மூலம், செயலி நேரலையில் வரும்போது அறிவிப்பைப் பெறுவதற்கு ஒருவர் பதிவு செய்ய முடியும்.
OpenAI நிறுவனம், ChatGPTக்கான புதிய "தனிப்பயனாக்கப்பட்ட வழிமுறைகள்" அம்சத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது, இது பயனர்கள் எதிர்கால உரையாடல்களுக்காக செயற்கை நுண்ணறிவு (AI)-chatbot உடன் அனைத்தையும் பகிர அனுமதிக்கிறது. "பிளஸ் பயனர்களுக்கான தனிப்பயன் வழிமுறைகள் தற்போது பீட்டாவில் உள்ளன, மேலும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளதாக" அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
புதிய உரையாடல்களுக்கான தனிப்பயன் வழிமுறைகளைப் பயனர்கள் எந்த நேரத்திலும் திருத்தி அமைக்கலாம் அல்லது நீக்க முடியும். மேலும், பயனர்களின் அறிவுறுத்தல்கள் பகிரப்பட்ட இணைப்புப் பார்வையாளர்களுடன் பகிரப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம், OpenAI நிறுவனம், iOS-ல் ChatGPT பயன்பாட்டைப் புதுப்பித்து இருந்தது மற்றும் பிளஸ் திட்ட பயனர்களுக்கு Bing ஒருங்கிணைப்பையும் இணைத்து இருந்தது. புதுப்பித்தல் அம்சத்துடன், ஹிஸ்டரி தேடுதல் அம்சத்தையும், OpenAI நிறுவனம் மேம்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழில் அறிமுகமாகும் கூகுள் ஏஐ பார்ட்... 40 மொழிகளில் அறிமுகம் !