ola electric scooters:உலக நாடுகள் அனைத்தும் கார்பன் வெளிபாட்டை குறைக்க அதிசிறந்த மின்சார வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவும் சற்றும் சளைக்காமல் மின்சார வாகனத் தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது. டிவிஎஸ் ஐகியூப், பியாஜியோ வெஸ்பா, ஏத்தர் போன்ற நிறுவனங்கள் தங்களின் மின்சார இருசக்கர வாகனங்களை பெருவாரியாக இந்தியாவில் சந்தைப்படுத்தினர்.
எனினும், வாகனங்கள் குறைந்த தூரமே இயக்க முடியும், மீண்டும் சார்ஜ் செய்யும் வசதியின்மை போன்ற காரணங்களால் இந்த வாகனங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.
மெகா திட்டத்தில் இறங்கிய ஓலா
இந்த நேரத்தில் தான் வாடகை கார் நிறுவனமான ஓலா, தனது முதல் ஓலா மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. நெதர்லாந்தைச் சேர்ந்த எட்டர்கோ எனும் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனத்தை தன்வசப்படுத்தி, இந்த முயற்சியில் ஓலா இறங்கியது.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி மின்சார ஸ்கூட்டர்களை தயாரிக்கும் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட ஆலையை நிறுவிவருகிறது, ஓலா. பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த ஆலை அமைக்கும் பணியில், வாகன உற்பத்தியை நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், எலெக்ட்ரிக் வாகனப் பயனர்களுக்கு பெரும் தடையாக இருந்த, சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு ஓலா தீர்வளித்தது. ஆம். இந்தியா முழுவதிலும் 100 நகரங்களில் 5000 அதிவிரைவாக சார்ஜ் செய்யும் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளை நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது.
முன்பதிவுக்கு முண்டியடித்த மக்கள்
தொடர்ந்து 10 வண்ணங்களில் தங்கள் ஓலா மின்சார ஸ்கூட்டரை இணையத்தில் அறிமுகப்படுத்தி, ரூ.499 செலுத்தி பயனர்கள் பதிவு செய்யலாம் என்று நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
பல அம்சங்கள், சார்ஜ் செய்ய எளிமையான வசதிகள் என ஓலா பயனர்களை குஷிப்படுத்த, முன்பதிவு தொடங்கிய 24 மணிநேரத்தில் ஒரு லட்சம் வாகனங்களை பயனர்கள் பதிவுசெய்தனர். இது ஒரு சாதனையாகப் பார்க்கப்பட்டாலும், ஓலா நிறுவனம் பயனர்களுக்கு அளித்த நம்பிக்கை என்றே இந்த அளவுக்கதிகமான பதிவுகளை நிறுவனம் பெற்றதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதாவது, வாகனம் குறித்த விளம்பரங்களில் தங்களுக்குப் போட்டியாக இருக்கும் ஸ்கூட்டர்களை ஓரங்கட்டும் அளவுக்கு அம்சங்கள் அள்ளித் தருவதாக நிறுவனம் உறுதியளித்திருந்தது. விலையும்கூட போட்டி நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த முழு விவரங்களையும், சுதந்திர தினமான இன்று நிறுவனம் வெளியிட்டது.
ஓலா எஸ் 1, எஸ் 1 ப்ரோ ஆகிய இரு மாடல்கள் 10 நிறங்களில் இந்திய சாலைகளில் களமாட வருகிறது என்று நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தது. ஸ்கூட்டரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.