டெல்லி: தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிராண்டின் புதிய லோகோவை கின்னஸ் சாதனையுடன் வெளியிட்டுள்ளது.
புதிய லோகோ குறித்து கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹோ சுங் சாங் கூறுகையில், “கியாவின் புதிய லோகோ மாற்றம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான தோற்றமாகவும், இந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளது. ஆட்டோமொபைல் துறை நவீனத்துவமாக விரைவான மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், மாற்றத்திற்கு ஏற்ப நாங்களும் மாறியிருக்கிறோம்.
மேலும், வேகமாக மாறும் தொழிலில் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ப, எங்கள் ஊழியர்களை மேம்படுத்துவோம். புதிய லோகோ முந்தைய கையால் எழுதப்பட்ட லோகோவிற்கு ஒத்திருக்கிறது. இது உத்வேகம் மற்றும் நம்பிக்கையின் தருணங்களைக் கொண்டுவருவதில் கியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
தென் கொரியாவின் இஞ்சியோனில் புதிய லோகோவைக் கொண்டாடும் நிகழ்வில், 303 ட்ரோன்கள் கொண்டு நூற்றுக்கணக்கான பட்டாசுகளை வெடித்து கியா தனது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது. பெரும்பாலான ஆளில்லா சிறிய ரக ட்ரோன்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தி பட்டாசுகளை வெடித்ததற்காக, கின்னஸ் உலக சாதனையையும் இந்த நிகழ்வு படைத்துள்ளது.
கியா பிராண்ட் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்களையும், நிறுவனத்தின் நோக்கம், எதிர்கால கியா வாகனங்களில் உள்ள பயன்பாடுகள் என அனைத்தையும் ஜனவரி 15, 2021 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது.