நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திருவிழாக் காலங்களில் தள்ளுபடிகளையும் சலுகைகளையும் வழங்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. ஆட்டோமொபைல் தொழில் மிக மோசமான மந்தநிலையால் பாதிக்கப்பட்ட பின்னரும் கூட கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வாங்கும் வாடிக்கையாளர்களின் தேவையை அதிகரிக்கும் பொருட்டு சலுகைகளை அந்நிறுவனங்கள் வழங்குகின்றன. தள்ளுபடிகள் தவிர புதிய மாடல்களையும், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளன. இனி நிறுவனங்களின் தள்ளுபடிகளையும், புதிய மாடல்களையும் பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ காருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. கார்ப்பரேட் வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், சில மாடல்களின் விலையில் ரூ. 5 ஆயிரத்தைக் (ex-showroom price) குறைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நெக்ஸன் மின் வாகனங்களையும் (EV) அறிமுகம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார்நிறுவனத்தின் சலுகைகள் ரூ. 95,000 வரை உள்ளன. எலன்ட்ராவின் பிரீமியம் செடான் என்ற புதிய மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது.