டெல்லி:இந்தியாவில் 5ஜி சேவை அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்பட 13 நகரங்களில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை ஜியோ மற்றும் ஏர்டெர் நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்குள் 31 லட்சம் பேர் 5ஜி சேவையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பிரதான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திவருகின்றன. இந்த நிலையில் எரிக்சன் மொபிலிட்டி ரிப்போர்ட் என்னும் ஆய்வில், இந்தியாவில் ஸ்மார்ட்போனுக்கான சராசரி டேட்டா டிராஃபிக் 25 ஜிபியாக உள்ளது.
இந்த டேட்டா டிராஃபிக் 2028ஆம் ஆண்டில் 54 ஜிபியாக உயரக்கூடும். நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்பாடு 77 விழுக்காட்டில் இருந்து 2028ஆம் ஆண்டு 94 விழுக்காடாக உயரக்கூடும். குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் 4G சேவையை பெறுவோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 93 கோடியாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை 2028ஆம் ஆண்டில் 57 கோடியாக குறையும், ஏனென்றால் மக்கள் 5ஜி சேவைக்கு மாறிவிடுவார்கள். அந்த வகையில் இந்தியாவில் வரும் 2028ஆம் ஆண்டுக்குள் 69 கோடி பேர் 5ஜி சேவையை பயன்படுத்துவார்கள். இந்த எண்ணிக்கையை உலகளவில் எடுத்துக்கொண்டால் 500 கோடியாக இருக்கும். இன்றைய நிலவரப்படி 5G சேவையை உலகளவில் 87 கோடி பேர் பெற்றுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவன தரவு மையங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு