2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலைச் சிற்றுண்டி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மற்றும் பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
இப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொலைவில் இருந்து கல்வி பயில வருகை தருவதாலும், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் காலைச் சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல் மற்றும் இட்லி (அல்லது) ரவா உப்புமா மற்றும் இட்லி (அல்லது) கிச்சடி மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சட்னி, சாம்பார் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதற்கான செலவினம் திருக்கோயிலின் நிதியிலிந்து செலவிடப்படும்.
இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் திரு. இரா.கண்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நவ.16 - 20 எங்கெல்லாம் மழை பெய்யும் - வெதர் ரிப்போர்ட்!