ஹைதராபாத்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள பஹயஹா (Bahanaga) பகுதியில் ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் கடந்த வெள்ளிக்கிழமை(ஜூன் 2) விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 700-க்கும் மேற்பட்டோர் ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடத்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மேற்கு வந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் என ஏராளமானோர் நேரில் ஆய்வு செய்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது தவிர ஒடிசா மாநில அரசும் தலா 5 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரயில் விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக நடந்து வந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு தண்டவாளங்கள், மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டு சரக்கு ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம் 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்' மாற்றம் தான் காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியிருந்தார். ஆனால், தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை இயக்க மேலாளர் சிக்னல் அமைப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து கடந்த பிப்ரவரி மாதமே ரயில்வே துறைக்குக் கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்த கடிதத்தில், ரயில்வே பாதுகாப்பு மேலாண்மை அமைப்பில் உள்ள சிக்னல் பிரச்சனை மற்றும் பாதையில் மாற்றம் ஏற்படும் அமைப்பு அதாவது இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்தில் உள்ள கோளாறுகளை அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் ரயில்வே அதிகாரி எழுதிய கடிதம் ஒன்றைப் பதிவிட்டு, இந்த விபத்துக்கு முழு காரணம் மத்திய அரசு தான் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
ஏற்கனவே விபத்து குறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே நிர்வாகம், விபத்துக்கான காரணம் தொழில்நுட்ப கோளாறாக இருந்தாலும் சரி, மனித தவறாக இருந்தாலும் சரி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. ஆனாலும், ரயில்வே அதிகாரி ஒருவர் எழுதிய அவசர கடிதத்தை துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்யாததே நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்புக்குக் காரணம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விபத்து ஏன்?: 'ரயில்வே நிர்வாகத்தின் குறைபாடுகளே காரணம்'.. அன்றே சொன்ன சிஏஜி அறிக்கை!