மதுரை:மயிலாடுதுறையைச் சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் ராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.,
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரான மயிலாடுதுறையைச் சேர்ந்த வீரக்குமாரை இந்திய கடற்படையினரே மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்புப்படை செய்திப்பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய படகு ஒன்று பாக் சலசந்தி பகுதியில் இன்று காலை கண்டறியப்பட்டதாகவும், சர்வதேச எல்லைப் பகுதி என்பதால் அந்த படகுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எச்சரிக்கைக்குப் பிறகும் அந்த படகு நிற்காததால் துப்பாக்கியால் சுட்டு படகை நிறுத்தியதாகவும், இதில் படகில் இருந்த ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நபரை இந்திய கடற்படைக்கு சொந்தமான சேட்டக் ஹலிகாப்டர் மூலமாக ராமநாதபுரம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கடற்படை தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.