சென்னை:தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமை கமலாலயத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் பாஜகவின் மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது"கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டிற்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் வந்தது ஊக்கம் தருகிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாது பிரதமருக்கு நேற்று (நவ-11)தமிழ் மக்கள் வரவேற்பு அளித்தனர். பிரதமர் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவில் தனது காரில் நின்றபடி தொண்டர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் கையசைத்து சென்றார். தமிழ்நாடு மக்களின் அன்புக்கு பாத்திரமாக பிரதமர் இருக்கிறார்.
மேலும், காசி தமிழ் சங்கம் குறித்து பிரதமர் நேற்று பேசினார். தமிழ்நாட்டில் இருந்து 2400 நபர்கள் 12 ரயிலில் இதில் பங்கேற்க காசி பயணம் செய்கின்றனர். முதல் குழுவை வாரணாசியில் 19ஆம் தேதி வரவேற்க வருவேன் என பிரதமர் கூறினார். உலகின் தொன்மையான மொழி தமிழ், அதை பறைசாற்றுவது தமிழர்களின் கடமை மட்டுமல்ல, இந்தியாவின் கடமை. தமிழ்நாட்டில் மருத்துவ, பொறியியல் கல்லூரியில் முழுமையாக தமிழில் பாடங்களை சொல்லித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான கருத்துகளை அமித்ஷா இன்று கூறினார்.
2010-ல் பொறியியல் கல்வி தமிழில் கொண்டு வரப்பட்டு, 1350 பொறியியல் படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் 50 மாணவர்களே தமிழில் இந்த ஆண்டு பொறியியல் பயில்கின்றனர். தாய்மொழியே பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்பது அமித்ஷாவின் விருப்பம் எனத் தெரிவித்தார்.
பாஜகவில் இணைய காத்திருக்கின்றனர்:முக்கியமான தலைவர்கள் பலர் பாஜகவில் இணைய காத்திருக்கின்றனர். அதற்கான நேரம் வரும்போது அவர்களை சேர்த்து கொள்வோம். பிரதமருடன் ஒரு மணி நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. கட்சி வளர்ச்சி குறித்து பேசினாம். தேர்தல், கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சரிடம் பொன் .ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார். அவற்றை நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதற்காக முதலமைச்சருக்கு நேற்று நான் நன்றி கூறினேன்.