தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

உலகமே பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னர்கள்!

''ரோம் நகர் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்'' என்ற பழமொழி தற்காலத்தில் பல தலைவர்களின் செயல்களுக்குப் பொருந்திபோகிறது. அவர்கள் குறித்த சிறு தொகுப்பு இதோ...

world-leaders-who-downplayed-coronavirus
world-leaders-who-downplayed-coronavirus

By

Published : May 20, 2020, 4:09 PM IST

''ரோம் நகர் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்'' என்ற பழமொழி உலகப் பிரபலமானது. ரோம் நகரமே 6 நாள்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தபோது, பிடில் வாசித்துக் கொண்டிருந்தாராம் ரோம் அரசன் நீரோ. மிகவும் கொடுமைக்காரனாகவும், விசித்திரமானவராகவுமே வரலாறு நீரோ மன்னனை பதிவு செய்துள்ளது. அவர் தனது 30ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டாராம்.

ஆனால் அவரின் பெயர் அண்மைக் காலங்களில் பல அரசியல் தலைவர்களுக்கும் பொருந்திபோவது தான் மிகவும் ஆச்சரியமான விஷயம். உலகமே கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அரசியல் தலைவர்கள் மக்களைக் கைவிட்டுவிட்டு விட்டார்கள். உலகத் தலைவர்கள் சிலரின் முடிவுகள் எப்படி மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டது என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப்:

அமெரிக்காவின் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பின் மிகமுக்கிய அங்கமாக விளங்குவது தேசிய மருத்துவப் புலனாய்வு மையம். நூற்றுக்கும் மேற்பட்ட வைராலஜிஸ்ட், பயாலஜிஸ்ட், கெமிக்கல் இஞ்சினியர்ஸ், ராணுவ மருத்துவர்களைக் கொண்ட அமைப்பு இது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அமெரிக்க பெரும் அழிவைச் சந்திக்க நேரிடும் என பிப்ரவரி மாதமே அறிக்கை கொடுத்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

ஆனால் இந்த அறிக்கையைப் பற்றிய எச்சரிக்கை சிறிதும் இல்லாமல் அதிபர் ட்ரம்ப், கரோனா வைரசைக் கண்டு கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என மக்களிடம் உரையாற்றினார். விளைவு, அடுத்த ஒரு வாரத்தில் ட்ரம்ப்பின் சாகசங்கள் முடிவுக்கு வந்தது. தான் கூறிய வார்த்தைகளை மறந்து, அமெரிக்காவில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.

அதுமட்டுமல்லாமல் மக்களைக் கிருமிநாசினிகளைக் குடிக்க வலியுறுத்தியது, கரோனா வைரஸ் பரிசோதனையைக் குறைத்தால் கரோனா வைரஸ் நோயாளிகளும் குறைவர் என புதிது புதிதாக பல உளறல்களைக் கொட்டித் தீர்த்தார். ஒவ்வொரு நாளும் புதிதாக உளறுவது, அந்த உளறல்களை மறைக்க அடுத்த நாளில் புதிய உளறல்கள் என உலகமே நடமாடும் நீரோ மன்னனைக் கண்டுகொண்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்:

அமெரிக்காவுடன் சமகாலத்தில் போட்டிபோடும் ஒரே நாடு ரஷ்யா தான். கரோனா வைரஸ் பாதிப்பிலும் அமெரிக்காவிற்குப் பின் அடுத்த இடத்தில் இருப்பது ரஷ்யாவே. தினமும் நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையிலும், அதிபர் புடின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவே மக்களிடம் கூறிவந்தார். மார்ச் மாதத்தில் வரவிருக்கும் சுகாதார நெருக்கடி பற்றி அதிபரிடம் முன்னமே நிபுணர்கள் எச்சரித்தும், அவர்களின் கருத்துக்களுக்கு அதிபர் புடின் செவிசாய்க்கவில்லை.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

ரஷ்யாவின் நிலையை மிகைப்படுத்திக் கூறியதோடு, நாட்டில் இருந்த வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை இத்தாலிக்கு அனுப்பிவைத்தார். இதனால் சொந்த நாட்டு மக்களுக்கு மாஸ்க்குகள், பாதுகாப்பு உடைகள் என அனைத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து வெளிப்படையாக விமர்சித்த பெண் மருத்துவரை சிறையில் தள்ளியதன் மூலம் நீரோ மன்னனை மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தினார்.

தற்போது கரோனா வைரஸ் காரணத்தால் ரஷ்யாவில் 80 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அதிபர் புடின் அலுவலகம், தாங்கள் கரோனா வைரசைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அறிக்கை கொடுத்துள்ளது.

பிரேசில் அதிபர் போல்சனாரோ:

பிரேசில் அதிபர் போல்சனாரோவை மாடர்ன் நீரோ மன்னன் என்றே அழைக்கலாம். ஏனென்றால், பிரேசில் தனது முதல் கரோனா வைரஸ் பாதிப்பை பிப்ரவரி 26ஆம் தேதியே கண்டறிந்தது. இதையடுத்து பிரேசில் பத்திரிகைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனப் பேசியபோது, அதிபரோ பத்திரிகைகளே கரோனாவை பெரிதுபடுத்துவதாக குற்றம் சாட்டினார்.

அதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆலோசனை கூறிய இரு அமைச்சர்களை அதிபர் போல்சனாரோ பதிவியிலிருந்து நீக்கினார். அதுமட்டுமல்லாமல், கரோனா வைரஸ் என்பது சாதாரண காய்ச்சல் தான் எனக் கூறியதோடு, கரோனா வைரசால் ஏற்பட்ட நெருக்கடியை இன்று வரை மிகைப்படுத்தப்பட்டதாகவே கருதிவருவது தான் பெரும் நகைச்சுவை.

பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான்:

கரோனா வைரசை எதிர்கொள்வதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகள் அந்நாட்டு மக்களிடமும், ராணுவத்தினரிடமும் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரசை பிரதமர் இம்ரான் கான் பெரிதாக எடுத்துக்கொள்ளாததே நடந்து வரும் பிரச்னைகளுக்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. முன்னதாக, கரோனா வைரஸ் பரிசோதனை திறன் 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக இம்ரான் கான் கூறினார். ஆனால், பாகிஸ்தானின் பரிசோதனை திறனை ஆராய்ந்தால் 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. கரோனா வைரசைக் குறைத்து மதிப்பிட்டதற்கான விலையை பாகிஸ்தான் தற்போது கொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான்

இதேபோல் கரோனா வைரசைக் குறைத்து மதிப்பிட்ட மற்றொரு நாடு இத்தாலி. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. அதில் 32 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தனிமைப்படுத்தலைக் காட்டுமிராண்டித்தனமான செயல் எனக் கூறிய ஈரானில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பாதிக்கப்பட்டு 7 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இதுவரை பார்த்த தலைவர்களிலேயே நீரோ மன்னம் பட்டம் ஃபர்பெக்ட்டாக பொருந்துவது பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூக்சாஹென்கோவுக்கு தான். ஏனென்றால் இவர் பெலாரஸ் மக்கள் பொதுஇடங்களில் கூடுவதற்கோ, பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கோ தடை விதிக்கவில்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை மையங்களில் மக்கள் வோட்கா (Vodka) அருந்தலாம் என அதிபர் ஆலோசனை கூறியது தான் உச்ச பட்ச அவலம்.

தங்கள் நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று இந்தோனேஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்த அடுத்த நாளே, அரசு பொது சுகாதார எமர்ஜென்சியை அறிவித்தது.

கரோனா வைரஸ் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனக் கூறிய சில நாள்களில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னரே அவர் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றார்.

மார்ச் மாதத்தில் ஸ்பெய்ன் நாட்டில் பல விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையாளர்களோடு நடத்த பிரதமர் பெட்ரோ சான்கஸ் அனுமதி வழங்கினார். இதன் விளைவு, கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்தது. அதில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கரோனா வைரசிலிருந்து விடுபட ப்ளீச்சிங் பவுடரையும், பாராசிட்டமல் மாத்திரைகளையும் பல உள்நாட்டுத் தலைவர்கள் பரிந்துரைத்தனர். ஏன் இந்தியாவில் கூட பல அமைச்சர்கள் கோமியத்தைப் பரிந்துரைத்தனர்.

கரோனா வைரஸ் என்பது கண்ணுக்குத் தெரியாத எதிரி. இதனை எதிர்க்க யார் மெத்தனமாகச் செயல்பட்டாலும் அவர்கள் நீரோ மன்னனாகவே மக்களால் கருதப்படுவர்.

இதையும் படிங்க:கரோனா போரில் வெற்றி கண்ட வியட்நாம் - திட்டங்களும் நடவடிக்கைகளும்..!

ABOUT THE AUTHOR

...view details