”தோல்வி பயம் யாரை விட்டது? அமெரிக்க அதிபரே ஆனாலும், தேர்தலில் வெற்றிக்கு வாய்ப்பில்லை, பதவியைத் தக்கவைக்க முடியாது என்னும் சூழலில் தேர்தல் ஜுரம் பாடாய்ப்படுத்தும். டிரம்ப் மட்டும் விதிவிலக்கா என்ன? சூறாவளியென சுற்றிச் சுழன்று தொய்வின்றி தாக்கி வரும் கோவிட்-19 வைரஸ் பரவலின் பிடியில் அமெரிக்கா சிக்கித் தவிக்கும் நிலையில், கடும் விமர்சனத்துக்கு ஆளகியிருக்கும் அதிபர் டிரம்ப், 2020 அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முயன்று வருகிறார்.
கரோனா அச்சத்தின் காரணமாக அஞ்சல் வாக்கிற்கு ஆதரவு பெருகிவருவதைக் கண்டு அதற்கெதிராக பொங்கி எழுகிறார். அஞ்சல் வாக்கில் ’துல்லியமான’ முடிவு தெரியாது, கிடைக்கும் முடிவுகள் சரியாக இருக்காது என முழங்குகிறார். ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால், டிரம்ப் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் என்பதே” என முன்னணி அமெரிக்க வரலாற்றாசிரியரும், கடந்த 40 ஆண்டுகளாக அதிபர் தேர்தல் முடிவுகளை துல்லியமாகக் கணித்தவருமான ஆலன் லிக்ட்மேன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ’நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டில் வெளியான அவரது தேர்தல் கணிப்பு, அவர் உருவாக்கிய ’திறவுகோல்கள்’ மாதிரியை அடிப்படையாக் கொண்டுள்ளது. இதன் வழியாக அடைந்த முடிவுகளின்படி டிரம்ப் கண்டிப்பாக தோல்வியைத் தழுவுகிறார், என்கிறார் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கப் பலகலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் லிக்ட்மேன்.
’வெள்ளை மாளிகைக்கான திறவுகோல்கள்’ என்ற நூலின் ஆசிரியரான லிக்ட்மேன் 1980இல் இருந்து ஒவ்வொரு அதிபர் தேர்தல் முடிவையும் வெற்றிகரமாகக் கணித்துள்ளார். பிற கருத்துக் கணிப்புகளை விடவும், இவரது கணிப்பு பிசிறுகள் ஏதுமின்றி துல்லியமாக இருந்து வந்துள்ளது. தனது திறவுகோல்கள் மாதிரிக்கு 13 வரலாற்றுக் காரணிகளை அடிப்படையாக வைத்துள்ளார் லிக்ட்மேன்.
அண்மையில் வெளியான ’ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ தினசரியில் வெளியான ’ரியல் கிளியர் பாலிடிக்ஸ்’ தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் களஆய்வு, டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமெரிக்க குடியரசு துணைத் தலைவருமான ஜோ பிடன் மிகப் பெரும் வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, அதிபரைத் தேர்ந்தெடுக்கும் அவையின் 538 உறுப்பினர்களின் வாக்குகளில், ஜோ பிடன் 308 வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் நிலையில், மாறாக டிரம்ப் வெறும் 113 வாக்குகளை மட்டுமே பெற இயலும். அதிபராக வெற்றிபெற 270 வாக்குகள் பெற்றாலே போதும் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், இந்தத் தேர்தல் அவையிலும் வெற்றி பெற்றால்தான், வெள்ளை மாளிகையில் அதிபராக காலடி எடுத்து வைக்க முடியும்.
தோல்வியை எதிர்கொண்டுள்ள அதிபர் டிரம்ப், இந்தக் கருத்துக் கணிப்புகள், தனக்கு ஆதரவளிக்கும் பெருவாரியான மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்று மார்தட்டுகிறார்.
இருப்பினும், தனது ’திறவுகோல்கள்’ சுட்டுவது போல டிரம்ப் தோல்வியடைவது நிச்சயம் என்பதில் உறுதியாக இருக்கிறார் லிக்ட்மேன். அது சரி, இந்த ’திறவுகோல்கள்’ மாதிரி என்றால் என்ன? அது செயல்படும் விதம் என்ன? அது குறித்து இப்போது பார்க்கலாம்.
லிக்ட்மேனின் ’திறவுகோல்கள்’ மாதிரி அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 13 வரலாற்றுக் காரணிகள் பின்வருமாறு: வேட்பாளர் சார்ந்த கட்சியின் இடைத் தேர்தல் வெற்றி, போட்டியின்மை, ஆட்சியில் இருப்பது, போட்டியில் மூன்றாம் நபர் இல்லாதது, குறைந்தகால அளவிளான வலுவான பொருளாதாரம், நீண்டகால அளவிளான வலுவான பொருளாதாரம், பெரு முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றம், ஊழல் அல்லது பிற குற்றச்சாட்டுகளில் சிக்காதது, இராணுவ / அயலுறவு தோல்விகள் இல்லாதது, அயல்நாட்டில் இராணுவ வெற்றி, ஊழல் அல்லது பிற குற்றச்சாட்டுகளில் சிக்காதது, ஆட்சியில் உள்ளவரின் கவர்ச்சி மற்றும் எதிர்த்துப் போட்டியிடுபவரின் கவர்ச்சியின்மை.
மேலே பட்டியலிடப்பட்ட 13 காரணிகளில் ஒவ்வொன்றுக்கும் ஆம், இல்லை என்ற இரட்டை வகைப்படுத்தல் மட்டுமே உண்டு. ஆறு அல்லது அதற்கும் மேற்பட்டவை இல்லை என்றால், ஆட்சியில் இருக்கும் அதிபர் வெள்ளை மாளிகையைக் காலி செய்ய வேண்டியதுதான். இதுவரையிலுமான தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதும் இதுவே.
டிரம்ப்புக்கு போட்டியாக பிடன் இருக்கும் நிலையில், ஏழு காரணிகள் இல்லை என்ற வகைப்பாட்டின் கீழ் வருவது, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கே சாதகமாக இருப்பதாக பேராசிரியர் லிக்ட்மேன் கணித்துள்ளார். ஜோ பிடனுக்கு சாதகமாக உள்ள அம்சங்கள் பின்வருமாறு: இடைத்தேர்தல் வெற்றிகள், குறைந்தகால அளவிளான வலுவான பொருளாதாரம், நீண்டகால அளவிளான வலுவான பொருளாதாரம், ஊழல் அல்லது பிற குற்றச்சாட்டுகளில் சிக்காதது, அயல்நாட்டில் இராணுவ வெற்றி மற்றும் ஆட்சியில் உள்ளவரின் கவர்ச்சியின்மை.
ஆனால், கருத்துக் கணிப்புகளை விடவும் இந்த ’லிக்ட்மேனின் மாதிரி’ எந்த அளவு நம்பிக்கைக்கு உரியது?