தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

UP Exit Polls: 'மாற்றம்' என்ற முழக்கம் வீழ்ந்தது ஏன்?

அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, மாயாவதி என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் களத்திற்கு மிகவும் தாமதமாகவே வந்தனர். ஒட்டுமொத்த மாநிலமும் கரோனா இரண்டாம் அலையில் துடித்துக்கொண்டிருந்தபோது, இந்த தலைவர்கள் யாரும் மக்களின் கண்களுக்க தென்படவில்லை. எதிர்க்கட்சிகள் பாஜகவின் இந்துத்துவ செயல்பாட்டை ஒத்துப்போவது போன்று, கோயில்களை சுற்றிவரும் 'மென் இந்துத்துவப்போக்கு'-ஐ தான் பின்பற்றி வருகின்றனர் - இவ்வாறு மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஸ்ரீநந்த் ஜா, உ.பி., கருத்துக்கணிப்புகள் குறித்த இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

UP Exit Polls
UP Exit Polls

By

Published : Mar 8, 2022, 10:49 PM IST

Updated : Mar 10, 2022, 7:32 AM IST

டெல்லி: கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன்(மார்ச்.7) நிறைவடைந்தது. மார்ச் 10ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் நிலையில், ஊடக நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாக உள்ளன. உத்தரகாண்டில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவுகிறது. உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா மாநில தேர்தல் கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக உள்ளன.

இதில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் நிலவரம் குறித்து எழுத்தாளரும், மூத்தப் பத்திரிகையாளருமான ஸ்ரீநந்த் ஜா பின்வருமாறு எழுதியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் வாக்குப்பதிவுக்கு பின்னான கருத்துக்கணிப்புகள் மூலம் மூன்று பெரிய கருத்துகளை நம் முன் காட்டுகிறது. முதலாவது பிரதமர் நரேந்திர மோடி கடைசி இரண்டு முக்கியமான கட்டங்களை பொறுப்பெடுத்ததன் மூலம் கிழக்கு உத்தரப்பிரதேசப் பகுதியில் பாஜகவுக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கியுள்ளார்.

இரண்டாவது, முதலமைச்சர் யோகியின் அரசுக்கு எதிராக திடமான எதிர்தரப்பை முன்வைக்காத சமாஜ்வாதி கட்சித் தலைமையிலான கூட்டணி. மூன்றாவது, இந்துத்துவ மனநிலை பெரிதும் உ.பி., வாக்களர்களிடேயே நிலைத்துவிட்டது.

கருத்துக்கணிப்புகள்

பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள், பாஜக சிரமமின்றி வெற்றிப் பெறும் என தெரிவிக்கின்றன. இந்தியா டூடே - மை ஆகிஸ் கணிப்பும் கூட, பாஜக 2017ஆம் ஆண்டை விட இம்முறை பெருவாரியான இடங்களை கைப்பற்றும் எனக் கணித்துள்ளது.

கருத்துக்கணிப்புகள் கடந்த தேர்தல்களில் பெரிதும் காலைவாரிவிட்டுள்ளன. கடந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கூட நாம் கண்கூடாகப் பார்த்தோம்.

UP Exit Polls

2018இல் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு சதவீதம் கூட ஒத்துப்போகவில்லை என்றுதான் கூறவேண்டும். அதனால், இந்த கருத்துக்கணிப்புகள் குறித்து வாக்கு எண்ணிக்கை நாளான மார்ச் 10ஆம் தேதிதான் நாம் முடிவுசெய்ய இயலும்.

மந்திரப் பூமியா கிழக்கு உ.பி.,

தற்போது வெளியாகி இருக்கும் கருத்துக்கணிப்புகள் உ.பி.,யின் கடைசிகட்ட வாக்குப்பதிவை உள்ளடக்கியதா என்பது தெளிவாக தெரியவில்லை. கடைசிகட்டத்தில் வாக்குப்பதிவான வாரணாசி, மிர்சாப்பூர், ஆசாம்கர், பதோஹி, ஜான்பூர், சோன்பத்ரா ஆகிய கிழக்கு உ.பி., தொகுதிகள் 2014ஆம் ஆண்டு வரை சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் கோட்டைகளாக இருந்தன. அதன்பிறகு, 2017இல் அனைத்தையும் பாஜக வாரிச்சுருட்டிவிட்டது.

அதேநேரத்தில், 2017 சட்டப்பேரவை, 2019 மக்களவை என இரு தேர்தல்களிலும் அனைத்து இடங்களையும் பாஜக வென்றாலும், கிழக்கு உ.பி., என்பது எப்போதும் ஊகிக்க முடியாததாகவே இருந்துள்ளது. உதாரணத்திற்கு, 2017இல் பாஜக ஆதரவு அலை பரவலாக இருந்த நேரத்திலும், கிழக்கு உ.பி., முடிவுகளும், மற்ற பகுதிகளின் முடிவுகளிலும் பெரும் வித்தியாசங்கள் இருந்தன. முந்தைய தேர்தலில், கிழக்கு உ.பி.,யில் உள்ள 54 இடங்களில் 29 இடங்களை வென்றது. அதன் கூட்டணி கட்சி 4 இடங்களையும் கைப்பற்றின.

சமாஜ்வாதி, யாதவர்கள் ஆதிக்கம் நிறைந்த எட்டா, எட்டாவா மற்றும் மெயின்புரி ஆகிய தொகுதிகளில் தோல்வியைத் தழுவினாலும், 54இல் 11 இடங்களை கைப்பற்றிவிட்டன. மறுபுறம் பகுஜன் சமாஜ் 5 இடங்களை கைப்பற்றிவிட்டது. தற்போதைய நிலவரத்தைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், 'மண்டல் பாலிடிக்ஸ்'-இன் மறுமலர்ச்சியாக சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி இங்கு (கிழக்கு உ.பி.,) அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது. ஆனால், கருத்துக்கணிப்புகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது நடக்க வாய்ப்பில்லை.

பெண் வாக்காளர்களின் மனநிலை

பல கட்ட வாக்குப்பதிவுகளில், குறிப்பாக கடைசி மூன்று சுற்றுகளில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள்தான் அதிக வாக்குகளை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. ஐந்தாம் கட்டத் தேர்தலில், ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 11 விழுக்காடு அதிகமாக இருந்துள்ளனர். ஆறாவது கட்டத்தில் 3 விழுக்காடு பெண்கள், ஆண்களை விட அதிகமாக வாக்குச்செலுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கை மிகச் சிறப்பாக பாதுகாப்போம் என பாஜகவின் முழக்கத்தை பெருவாரியான பெண் வாக்காளர்கள் ஏற்றுள்ளதைத்தான் இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பிரதமரின் பல நலத்திட்ட உதவிகளில், இலவச ரேஷன் மற்றும் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டம் ( வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டம்) ஆகியவற்றால் பெண்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். சமாஜ்வாதி வந்தால் குண்டர்களின் ஆட்சி வந்துவிடும் என்ற பாஜகவின் பிரசாரமும் பெண்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரொம்ப லேட்டு

எல்லா ஆளுங்கட்சிகளை போலவே, யோகியின் அரசும் அரசாங்கத்திற்கு எதிரான மனநிலையை எதிர்கொண்டே ஆக வேண்டும். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றைத் தவிர்க்க முடியாது. இருப்பினும், எதிர்க்கட்சியினர் இதுகுறித்து வலிமையான ஒரு கதையாடலை உருவாக்கத் தவறிவிட்டனர். அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, மாயாவதி என அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் களத்திற்கு மிகவும் தாமதமாகவே வந்தனர்.

ஒட்டுமொத்த மாநிலமும் கரோனா இரண்டாம் அலையில் துடித்துக்கொண்டிருந்தபோது, இந்த தலைவர்கள் யாரும் மக்களின் கண்களுக்குத் தென்படவில்லை. எதிர்க்கட்சிகள் பாஜகவின் இந்துத்துவ செயல்பாட்டை ஒத்துப்போவது போன்று, கோயில்களை சுற்றிவரும் 'மென் இந்துத்துவப்போக்கு'-ஐ தான் பின்பற்றி வருகின்றனர்.

போட்டியாளர் இல்லை என்ற நிலையில் இருந்து, பரப்புரையின் கடைசி கட்டங்களில் பாஜக புதிய யதார்த்தங்களையும், புதிய சவால்களையும் (உக்ரைன் - ரஷ்யா போர்) எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை, முயற்சிகள் மிகக் குறைவாகவும் தாமதமாகவும் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

(பொறுப்பு துறப்பு: இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எழுத்தாளரின் கருத்துக்கள். இது ஈடிவி பாரத் ஊடகத்தின் கருத்துகள் இல்லை)

இதையும் படிங்க: தேர்தல் கருத்துக்கணிப்புகள் 2022: குஷியில் பாஜக... கவலையில் காங்கிரஸ்...

Last Updated : Mar 10, 2022, 7:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details