ஐதராபாத்: ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வரும் அரசியல்வாதி, எம்எல்ஏவாக இருந்தாலும் கூட சொந்த கட்சியில் எதிர்கொள்ளும் அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் தான் மாரிசெல்வராஜ் படைத்திருக்கும் மாமன்னனின் கதைக்களம். ஆனால் இதில் சாதிய எண்ணங்கள் கொண்ட எதிர்மறை கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ள பகத்பாசிலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, யாரும் எதிர்பாராததுதான்.
வில்லன்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா?: தமிழ் சினிமாவில் வில்லன் கொண்டாடப்படுவது இதுதான் முதன்முறையா? தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலும் வலுவான வில்லன்கள் (Antagonist) இல்லாத ஹீரோவுக்கு மதிப்பு இல்லை. எம்ஜிஆருக்கு இணையான ரசிகர்கள் நம்பியாருக்கு இருந்த போதும் அவர் கொண்டாடப்பட்டதில்லை. ஆனால் பிற்காலத்தில் இது மாறியது.
16 வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்துக்கு கிடைத்த வரவேற்பு புதிதாக சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த காலத்தில் சமூகவலைத்தளங்கள் இருந்திருந்தால் "இதெப்படிஇருக்கு" என்ற வசனம் டிரெண்ட் ஆகியிருக்கலாம். இவருக்குப் பின்னர் சத்தியராஜ் வில்லனாக ஒரு மிரட்டு மிரட்டினார் . கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த காக்கிச்சட்டை படத்தில் "தகடு தகடு" என்று இவர் பேசிய வசனம் இன்றும் டிரெண்டிங் கண்டெண்ட் தான். அமைதிப்படை அமாவாசை குறித்து பேசவே வேண்டாம்.
ரத்னவேலு பாத்திரத்தின் சிக்கல் என்ன?: சமீபத்தில் கூட "தனி ஒருவன் " திரைப்படத்தில் ஹீரோ ஜெயம் ரவி ஆனாலும், நடிப்பில் மிரட்டியது அரவிந்த் சாமி தான். இப்படி எதிர்மறை கதாப்பாத்திரங்களை கொண்டாடுவது தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் புதிது அல்ல இருந்தாலும் ரத்னவேலு கதாப்பாத்திரத்தின் அடிப்படையாக சித்தரிக்கப்படும் சாதிய உணர்வுதான் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்துகிறது.
சாதிவெறியனா ரத்னவேலு?: முதலில் மாமன்னன் ரத்னவேலுவின் கதாப்பாத்திரம் வெறும் சாதிய வெறி கொண்ட பாத்திரமா அல்லது, சாதியை தனது வெற்றிக்கான அல்லது ஆதிக்கத்திற்கான கருவியாக பயன்படுத்தும் சாதுரியம் கொண்ட கதாப்பாத்திரமா என்பதை மாரிசெல்வராஜின் திரைமொழியிலிருந்து அணுகலாம். தந்தை வென்று கொடுத்த ஒரு சாம்ராஜ்யத்தை தக்க வைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காத மகன்தான் ரத்னவேலு. அவனுக்கு கட்சி கொள்கை என்பது மட்டுமல்ல, சாதி கூட தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான கருவிதான். சொந்த சாதிக்காரர்களை கண்டு கொள்ளாததாக குற்றம் சாட்டும் சாதி சங்கத்தினரின் காலில் விழவும் தயங்காத ரத்னவேலு, தனக்கு ஒரு நன்மை கிடைப்பதற்காக அதே சாதி சங்கத் தலைவரை கொல்வதையும் மாரி செல்வராஜ் காட்சிப்படுத்தியிருப்பார்.
சாதிக்க பயன்படும் சாதி: சாதிமட்டுமே முன்னிலை என கூறிக்கொள்ளும் நபரால் அதிகபட்சமாக சாதிச்சங்கம் வேண்டுமானால் நடத்த முடியுமே தவிர, ஓட்டு அரசியலில் நிலைக்க முடியாது. இதனைத்தான் மாமன்னனை நிற்க வைத்தும் அவரது மகன் அதிவீரனை உட்கார வைத்தும் ரத்னவேலுவின் கதாப்பாத்திரம் தனது அரசியலை பேசும். சாதி வெறி மட்டுமே கொண்ட கதாப்பாத்திரம், அந்த சாதியால் கொல்லப்படும் அல்லது கொலை செய்யும் அல்லது பகடைக்காயாக மட்டுமே பயன்படும் என்பதை பல உதாரணங்களிலிருந்து அணுகலாம்.
உங்கள் தெருவிலும் யாரோ ஒருவரின் அரசியலுக்காக சாதி வெறி தலையில் ஏற்றப்பட்டு வாழ்வைத் தொலைக்கும் இளைஞர்கள் இன்றும் சுற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆக என்னுடைய பார்வையில் ரத்னவேல் சாதி வெறி மட்டுமே கொண்ட கதாப்பாத்திரம் இல்லை. சாதியை நுணுக்கமாக தனது தேவைக்கு பயன்படுத்தும் வித்தை தெரிந்த கதாப்பாத்திரம்.
பகத்துக்கும் இது புதிதல்ல: சரி எதிர்மறை பாத்திரத்திற்காக போற்றப்படும் பகத்பாசிலின் தரப்பிலிருந்து பார்த்தோமானால், அவருக்கும் இது ஒன்றும் புதிதல்ல. மலையாள சினிமாவிலும் ஹீரோ பாத்திரம் மட்டுமே ஏற்கும் டிப்பிக்கல் நடிகர் அல்ல பகத் பாசில். கதையின் ஏதோ ஓரத்தில் வருவது போல அக்கா கணவர் பாத்திரத்தில் வந்து கும்பாலங்கி நைட்ஸை கலங்கடித்தவர் தான் இவர். சிரித்துக் கொண்டே பார்க்கும் இவரது பார்வை ஒன்றே போதும். ஜோஜி, சப்பா குரிஷுஎன இவது வில்லத்தனமான கதாப்பாத்திரங்களுக்கு தனி ஆராய்ச்சியே செய்யலாம். மெத்தட் ஆக்டிங் எனப்படும் இலக்கணத்துடன் நடிக்கும் இவருக்கு மாமன்னனில் எதிரே இருப்பது உதயநிதியும் வடிவேலுவும். மாமன்னன் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க வலுவான வில்லன் தேவை. அதனை பகத் பாசில் அளவுக்கு வேறு யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது.
தோல்வியடைந்தாரா மாரி செல்வராஜ்: என்றுமே நேர்மறையான விஷயங்களைக் காட்டிலும், எதிர்மறை தகவல்கள் வேகமாக சென்றடையும். தேவர் மகன் திரைப்படமோ, சின்னகவுண்டர் திரைப்படமோ வெளியான போது அவற்றில் சாதி இருக்கிறதா? என்ற ஆராய்ச்சிக்கு கூட யாரும் முன் வரவில்லை. ஆனால் இது இன்று திரை ஆளுமைகளாலும், ரசிகர்களாலும் விவாதிக்கப்படுகிறது. மாமன்னனும் இப்படி காலம் கடந்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அந்த நாளில் இளைஞர்களின் உள்ளத்தில், ரத்னவேலுவும், மாமன்னனும் எந்த தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பது தான் மாரி செல்வராஜின் வெற்றியையோ, தோல்வியையோ தீர்மானிக்கும்.