சீனா ’சாதூர்யமாக விதிகளை உடைக்கும்’ வேலையில் ஈடுபடுகிறது, சிறிய நாடுகள் மீது பொருளாதார நெருக்கடிகளைக் கொடுப்பதுடன், இந்த பேரிடர் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு ஆதாயம் பெற நினைக்கிறது என்று, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் கடுமையாக சாடியுள்ளார். ஹவாய் தலைநகர் ஹோனோலுலுவில் நடந்த DKIAPCSS (டேனியல் கே ஐனோயூ – பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய-பசிபிக் மையம்) மையத்தின் 25வது ஆண்டுவிழா காணொளிக் காட்சி மூலம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொண்ட அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் டாக்டர்.மார்க் டி எஸ்பெர், சீனா குறித்து பரபரபப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். DKI-APCSS மையமானது, இந்திய -பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பயிற்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்கும், சர்வதேச போர்த்திறம் சார்ந்த விவகாரங்களுக்காகவும் கடந்த 1995ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழாவில் ‘மேம்பட்ட மற்றும் சுதந்திரமான இந்திய – பசிபிக்’ என்ற தலைப்பில் பேசிய எஸ்பெர், “நம்மிடம் உள்ள அதிநவீன கூட்டிணைவுக்கான வழிமுறைகளின் மூலம், சமச்சீரற்ற நிலையை ஏற்படுத்துவோரைத் தடுக்க முடியும். சீனா தங்கள் சுய லாபத்திற்காக விதிகளையும், கட்டுப்பாடுகளையும் வளைப்பதோடு, மற்றவர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.” என்று சாடியுள்ளார்.
2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய பாதுகாப்பு போர்த்திற விதிமுறைகளின் படி, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 50 சதவீத பாடத்திட்டத்தில் சீனாவை மையப்படுத்துமாறும், சீன மக்கள் குடியரசை ’அச்சுறுத்தல்’ என்று நமது பள்ளிகள், திட்டங்கள் மற்றும் பயிற்சிகளில் சேர்க்குமாறு உத்தவிடப்பட்டுள்ளதாக, டாக்டர்.எஸ்பெர் கூறியுள்ளார்.
“சீன கம்யூனிச கட்சியின் தலைமையில் இயங்கும் அந்நாட்டு அரசு, தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டனர். முதலில் சர்வதேச விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அல்லது சட்டங்களை காற்றில் பறக்க விட்டு, சர்வதேச அமைப்புகளையும், சந்தைகளையும் தங்கள் நலனுக்கு வளைத்துக் கொண்டுள்ளனர். இரண்டாவதாக, ஹாங்காங்கின் சுயாட்சியை காப்பது மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை தொடராமல் இருப்பது உள்பட, சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை தூக்கி எறிந்துள்ளனர்,” என்று காட்டமாக டாக்டர். எஸ்பெர் தெரிவித்துள்ளார். “சீனாவின் இந்த சுயநல நடவடிக்கை இந்திய – பசிபிக் பிராந்தியத்தோடு நின்றுவிடவில்லை.
உலகம் முழுவதும் எங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகும் கூட்டிணைவு நாடுகளிலும் சீன அரசு தங்கள் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீறியுள்ளது. அத்துடன் பொருளாதார அழுத்தம் தருதல் உள்பட தீங்கு விளைவித்து பல்வேறு அளவுகளில் உள்ள நாடுகளை துன்புறுத்தும் செயலில் ஈடுபடுகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை வலியுறுத்தியுள்ள ட்ரம்ப் அரசின் முக்கிய அமைச்சர், சீனாவின் ராணுவம் அந்நாட்டின் நலனுக்காக பணியாற்றவில்லை என்றும், மாறாக அந்நாட்டின் அரசியல் ஆதாயத்திற்காக பணியாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். “சீனாவின் மக்கள் ராணுவத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை பெருக்க உதவுவது போல் உள்ளது.
உலகளவில் நவீன ராணுவமாக பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற ரகசியக் குறிக்கோளுடன், பல்வேறு நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொள்கிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவின் மக்கள் ராணுவம் தைரியமாக தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிகளிலும், பல நாடுகளிலும் தங்கள் விருப்பம் போல ஆக்கிரமிப்புகளை மேற்கொள்கின்றனர்,” என்று பாதுகாப்பு செயலர் குற்றம் சாட்டுகிறார்.
இந்திய -பசிபிக் பிராந்திய நாடுகள் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை அளிக்கின்றன, அத்துடன் இந்த பிராந்தியத்தில் தான் 6 அணுசக்தி நாடுகளும், உலகின் சிறந்த ராணுவ கட்டமைப்பில் உள்ள 10 நாடுகளில் 7வது இடத்தில் உள்ள நாடும் இருக்கிறது. அதனால் சீனாவுக்கு எதிர்ப்பு என்பது பலமாகவே உள்ளது. எனவே அமெரிக்காவுக்கும் கூட்டிணைவு நாடுகளுக்கும், சிறிய நாடுகளுக்கும் இடையிலான உறவு பலமாக இருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.