ஹைதராபாத்:இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துபென்னார் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் பி.வி.ராவ், “இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (GDP) சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro Small and Medium Enterprises - MSME) தொடர்ச்சியாக 30 சதவீதம் பங்குவகித்து வருகின்றது. 111 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை அளிக்கும் இந்த துறை அதன் கடன் தேவையான 37 ட்ரில்லியனில் வெறும் 14.5 ட்ரில்லியனை மட்டும் பெற்று 20 - 25 ட்ரில்லியன் கடன் இடைவெளியைச் சந்திக்கிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கடன் இடைவெளி 530 பில்லியன் டாலர்கள். எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கடன் தேவையான 819 பில்லியன் டாலர்களில் இருந்து 289 பில்லியன் டாலர்களை மட்டுமே பொது மற்றும் தனியார் வங்கிகள் போன்ற முறையான நிதி அமைப்புகளிடம் இருந்து பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான பங்கு வகித்தும் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கடன் இடைவெளி தீராத சிக்கலாகவே உள்ளது என முதலீட்டு நிறுவனமான (investment banking) அவெண்டஸ் கேபிடல் (Avendus Capital) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வணிக அமைப்பில் எம்எஸ்எம்இ பெரும் பங்கு வகித்த போதிலும் அதன் கடன் இடைவெளி காரணமாக அதன் முழுத் திறன் வெளிக்கொணரப் படாமல் உள்ளது. வளரும் நாடுகளில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் எம்எஸ்எம்இ நிறுவனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன என உலக வங்கியின் அறிக்கைத் தெரிவிக்கிறது.
புதிதாகப் படித்து முடித்து வருபவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக 2030ஆம் ஆண்டிற்குள் 600 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. உலகளவில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அதன் கடன் இடைவெளியைக் குறைத்து எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பில் எம்எஸ்எம்இ முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மொத்த தொழில்துறை உற்பத்தியில் 45 சதவீதம், மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதம் பங்களிக்கின்றது. நாட்டின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களிலும் எம்எஸ்எம்இ துறை நன்கு கால்பதித்துள்ளது.
இத்தகைய பங்களிப்பை நாட்டிற்கு வழங்கிய போதும் எம்எஸ்எம்இ துறை இந்தியாவின் நிதிச்சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்படவில்லை. 64 மில்லியன் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இந்தியாவில் இருந்த போதும் அதில் 14 சதவீதம் மட்டுமே கடன் உதவி பெற முடிகிறது. இதனால் எம்எஸ்எம்இ தொழில்துறை செயலற்ற நிலையில் உள்ளது. 80 சதவீதம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் வங்கிகளின் கடன் வரம்பிற்கு வெளியே இருப்பதால் தனியார் நிதி சேவையை நாட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான கடன் மற்றும் பணப்புழக்கத்திற்கான கொள்கையை உருவாக்க அரசு பலமுறை நடவடிக்கை எடுத்திருந்தாலும் எம்எஸ்எம்இ நிறுவனங்களில் கடன் ஓட்டம் குறைவாகவே உள்ளது. கரோனா தொற்றிற்குப் பிறகு வங்கித் துறையில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங் போன்றவை கடன் இடைவெளியைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இதனால் ஆன்லைன் கடன் வழங்குதலில் 2 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது என BLinc அறிக்கை தெரிவிக்கிறது.