ஒரு பத்து வயது சிறுமி, தேம்பித்தேம்பி அழுதுகொண்டே வந்தது, அந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்னின் மனதை உலுக்கியது.
வருடம் 1991, விமானம், ஹைதராபாத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்குப் பயணித்துக் கொண்டிருந்தது. சிறுமியின் விசும்பல் நின்றபாடில்லை. ஏன் என்று அருகில் சென்று விசாரித்தார் விமானப் பணிப்பெண் அம்ரிதா அஹ்லுவாலியா.
தன்னை ஒரு 60 அல்லது 70 வயதான முதியவருக்குத் திருமணம் முடித்து, வளைகுடா நாடு ஒன்றுக்கு கொண்டு செல்வதாக சிறுமி கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அம்ரிதாவின் முயற்சியால், அந்த பிஞ்சுக் குழந்தை வளைகுடா செல்வது தடுக்கப்பட்டு, பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
அதே விமானத்தில் பயணித்த, சிறுமியை மணம் முடித்த கணவர் மீது வழக்கும் பதியப்பட்டது. இருப்பினும், அந்த பணக்கார வயோதிக மாப்பிள்ளை ஜாமீனில் வெளிவந்து போலி பாஸ்போர்ட் மூலம், இந்தியாவில் இருந்து, சட்டத்தின் பிடியில் இருந்து, தப்பிச் சென்றது வேறு கதை.
ஆனால், இந்த சம்பவம்தான் மனிதக் கடத்தல் என்னும் கொடுமையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து ஊரறியச் செய்தது. இதன் பின்னரே, இந்த பிரச்னையின் அணைத்துப் பரிமானங்களும் பொது வெளியில், சிவில் சமூகத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஒட்டக ரேஸ் குழந்தைக் கடத்தல்
இதனையொஒட்டி, வளைகுடா நாடுகளின் பாலைவனத்தில் பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்கு விளையாட்டான ஒட்டக ரேஸ், ஊடகங்களின் கண்கானிப்பில் வந்தது.
இந்த ஒட்டக ஓட்டப் போட்டிக்காக 4 முதல் 10 வயதே நிரம்பிய இந்திய சிறார்கள், வளைகுடா நாடுகளின் கோடீஸ்வரர்களுக்கு விற்கப்படும் கொடூரம் பொதுவெளிக்குவந்தது.
ஜாக்கிகளாக செயல்பட, இந்தச் சிறுவர்கள் ஒட்டகங்களின் முதுகில் கயிற்றால் பிணைக்கப் படுவார்கள். ரேசில் ஒட்டகம் ஓடும் வேகம், அச்சத்தில் அந்த சிறுவர்கள் அலறுவதற்கு ஏற்ப அதிகரிக்கும்.
சரியாக கயிற்றில் கட்டப்படாத சிறுவர்கள் கீழே விழுந்து, ஒட்டகங்களின் கால்களில் மிதிபடும் அவலமும் நடந்தேறும். இதில் தப்பி உயிர் பிழைப்போர், தங்கள் நிச்சயமற்ற கடினமான வாழ்க்கையைத் தொடர்வதுடன், பாலியல் சுரண்டலுக்கும் சித்திரவதைக்கும் ஆளாவார்கள்.
செங்கற் சூளை: கொத்தடிமைகளின் நரகம்
அண்மையில், பல்வேறு பகுதிகளில் செங்கல் சூளைகளில் பணிபுரியும் நூற்றுக் கணக்கானோர் கொத்தடிமைகளாய் உழன்றுவருவது தெரியவந்தது. இவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம்.
கூண்டில் அடைக்கப்பட்ட விலங்குகளைப்போல மோசமான தங்குமிடத்தில் இருந்துகொண்டு, அடிமாட்டுக் கூலிக்கு, அடிமைகளாய் மணிக்கணக்கில் நெடுநேரம் தொடர்ந்து வேலை செய்யவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு, ஒப்பந்தக்காரரின் பிடியிலிருந்து விடுதலை பெற, சிலர் அங்கிருந்து தப்பிக்க முயன்று பிடிபட்டனர். அப்போது, அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் கொடூரத்தின் உச்சம்.
ஒரு காலோ அல்லது கையோ, ஏதாவது ஒன்று வெட்டப்படும். நேயர் விருப்பம் போல, இதில் எதனை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தண்டனை பெறுவோரின் விருப்பம் சார்ந்தது.
துணிச்சல் நாயகி: மான்சிபரிஹா
செங்கல் சூளையில் வேலை செய்த துணிச்சல் மிக்க ஒரு பழங்குடியின இளம் பெண் குறித்து சில தினங்களுக்கு முன்னர் தினசரிகளில் செய்தி வெளியானது. அங்கு கூலி, ஒரு வாரத்திற்கு ரூ 250 மட்டுமே. இப்படி அடிமையாக இருப்பதைவிட சென்றுவிடலாம் என, மான்சி பரிஹா என்ற அந்தப் இளம் பெண்ணும் மற்றும் சிலரும் முயன்றபோது, அவர்களை வேலைக்கு அமர்த்திய ஒப்பந்தக்காரர் மற்றும் அவரது குண்டர்களால் ஈவிரக்கமின்றி மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
இதற்கு முடிவுகட்ட மான்சி, இந்த கொடுமைகளை எல்லாம் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அவரது பதிவு வைரலாகப் பரவ, அரசு நிர்வாகம் விழிப்படைந்தது. அதன் விளைவாக, கொத்தடிமைகளாக தமிழ்நாட்டின் செங்கற் சூளைகளில் பணிபுரிந்த 6000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பாலியல் சுரண்டல்
இத்தகைய சூழலில், மனிதக் கடத்தலுக்கு பலியாகும் அப்பாவிகள் பலர் வேறு வழியின்றி பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர். இது குறித்து சமீபத்தில் வெளியான ஐ.நா ஆய்வறிக்கை தெரிவிக்கும் தகவல் பேரதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
உலகம் முழுவதிலும் கடத்தலுக்கு ஆளாவதில் ஆகப் பெரும்பாண்மையான 70 விழுக்காடு பெண்களும் குழந்தைகளுமே என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பாலியல் சுரண்டலுக்காக இல்லை என்றால், எதற்காகாக அவர்கள் கடத்தப்பட வேண்டும்? வேறெந்த காரணமும் இருக்க முடியாது என்பதே உண்மை.
இந்தியாவில் இருந்து கடத்தப்படும் பெண்களும் குழந்தைகளும் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என எவ்வாறு நாம் நம்பிக்கையுடன் இருக்க முடியும்? எண்ணிக்கை குறைவு என்றாலும், அதற்கு எந்த ஒரு சமாதானமும் கூற இயலாது. அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
இவ்வாறு பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் பெண்கள் வறுமையில் வாடுவோராகவும், கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையிலும் கடன் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, எப்படியாவது விடுபெற தாம் பெற்ற பிள்ளைகளையே விற்ற பெற்றோர் பற்றி அவ்வப்போது செய்திகள் வருகின்றன. இது தவிர, இளம் சிறார் மற்றும் சிறுமியரை கடத்திச்சென்று விற்பனை செய்யும் கும்பலும் உண்டு.
இணையவழி கடத்தல்
சில சமயங்களில், மனிதக் கடத்தல் நூதனமான பெயர்களில் அழைக்கப்படுகின்றன. குழந்தைத் திருமணம் அல்லது குழந்தைத் தொழிலாளர் அல்லது கொத்தடிமை என எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், எனது பார்வையில் அது அடிமைத்தனமே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இணையவழிக் கடத்தலே தற்போது நம்மை அச்சுறுத்தும் பேராபத்தாக வாளர்ந்து வருகிறது. இளம் பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மயக்கி, வலையில் வீழ்த்தி கடத்தலில் ஈடுபடும் கும்பல்களும், அவர்களுடைய ஏஜண்டுகளும் இந்த அபலைகளை விபச்சாரத் தொழிலில் தள்ளி விடுகின்றனர்.
இது குறித்த அனைத்துப் உரையாடல்களும் பரிமாற்றங்களும் இணைய வழியில் ந்த நூதன முறையில் நடைபெறுவதால், இதில் பலியாகும் பெண்களால் தரகர்களையோ, இந்தத் தொழிலின் முக்கியப் புள்ளிகளையோ அடையாளம் காட்ட முடிவதில்லை. இவ்வாறு முகமற்று செயல்படும் இந்த ஈவிரக்கமற்ற அரக்கர்களை கண்டறிவதோ, வெற்றிகரமாக சட்டத்தின் முன் நிறுத்துவதோ மிகப்பெரும் சவாலாக உள்ளது.
கடத்தல் மாஃபியா - அரசியல்-அதிகார வர்க்க தொடர்பு
அண்மையில் தலைநகர் டெல்லியில், ஒரு கடத்தல் கும்பலின் பெண் தலைவியின் கைது, அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொணர்ந்தது. கடத்தல் கும்பல்களுக்கு செல்வாக்கு மிக்கவர்களிடமும், அதிகார மட்டத்திலும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அண்மையில் கைதான கடத்தல் பெண் தலைவி டெல்லியை மையமாக வைத்து கடந்த 2000இல் இருந்து 20 வருடங்களாக, அவரது தொழிலுக்கு எந்த ஒரு சிக்கலுமின்றி, செயல்பட்டு வந்திருக்கிறார். எந்த ஒரு தடையும்மின்றி, நிறுத்துவதற்கு யாருமின்றி, கேட்பதற்கு யாருமின்றி இதுவரையிலும் தங்கு தடையின்றி அவரது தொழில் நடைபெற்று வந்திருக்கிறது.
அச்சமளிக்கும் வகையில் அதிகரித்து வரும் மனிதக் கடத்தலை தடுக்க வேண்டி, ஐ.நா பேரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில், மனிதக் கடத்தலுக்கு எதிராகவும் சமூகத்தில் அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘நீல நெஞ்ச’ பரப்புரையை ஐ.நா தொடங்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மனிதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை ஒட்டி நடைபெற்ற இனைய கருத்தரங்கில் நான் உரையாற்றினேன். நிகழ்ச்சியை, ஹைதராபாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தன்னார்வ அமைப்பான பிரஜ்வலா ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது, கடத்தலில் இருந்து மீண்ட மூவர் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பகிர்ந்துகொண்டனர். மீண்டவர்களுக்காக செயல்படும் ’அபராஜிதா’ என்னும் அமைப்பைச் சேர்ந்த அவர்கள் தங்கள் கருத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்தனர்.
அவர்கள் கூறியது அனைவரின் கண்களைக் குளமாக்கியது மட்டுமல்ல, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு பெண்ணை, அவரது தாயாரே விபச்சாரத்திற்கு விற்றுவிட்டார்; மற்றொருவர் நபரின் ஆசை வலையில் வீழ்த்தப்பட்டார்; பிறிதொருவரோ, அவர் படித்த பள்ளியின் ஊழியர் ஒருவரால் ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு உள்ள சிவப்பு விளக்குப் பகுதியில் கைவிடப்பட்டார்.
மூவரின் அனுபவப் பகிர்வு, அரங்கத்தையே உறையவைத்தது. மேலும், வேறு 14 மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் தங்களுடைய கண்ணீர்க் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் நெருப்பாற்றை நீந்தி வந்திருக்கின்றனர்.
மனிதக் கடத்தல் – முற்றாக ஒழிக்க முடியுமா?
கண்முன் நடைபெறும் கொடுமையான மனிதக் கடத்தலைத் தடுத்து நிறுத்த ஒரு சமூகமாக நாம் என்ன செய்ய முடியும்? இன்று நிலவும் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தோம் என்றால், மனிதக் கடத்தல் என்னும் தீமையை முற்றாக ஒழிக்க முடியாது என்றே தோன்றுகிறது.
அந்த அளவுக்கு இதன் ஆக்டோபஸ் கரங்கள் விரிந்து பரந்துள்ளது. ஆனால், இதனைப் பெருமளவுக்கு நாம் கட்டுப்படுத்த முடியும். நமது நாட்டைப் போன்ற மக்கள் நல அரசு, பெண்களும் குழந்தைகளும் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழவும், பாலியல் ரீதியாகவோ, பிறவழிகளிலோ சுரண்டலுக்கு ஆளாகாமல் மதிப்புடன் வாழ்வதை உறுதி செய்வதுடன் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
நமது நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் அமைப்புகள், இதற்கு முன்னர் இருந்தததைக் காட்டிலும் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட்டு, கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக இருப்போருக்கும் இடையேயான சங்கிலிப் பிணைப்பை அறுத்தெறிவது இன்று மிகவும் அவசியமாகிறது.
மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய அரசியல் உறுதியும் இதற்கு இன்றியமையாதது ஆகும். கடத்தல் கொடுமையில் இருந்து மீண்டவருக்கான மறுவாழ்வு மையங்கள் அமைத்திட வேண்டும்.
முன்னர் குறிப்பிட்ட மூவரும் தெரிவித்த ஆலோசனைகளின்படி, அவை சிறப்பாக செயல்பட தொடர் கண்கானிப்பு மிகவும் அவசியம். அவ்வாறு தொடர் கண்கானிப்பு இல்லை என்றால், முசாஃபர்பூர் மறுவாழ்வு மையத்தில் நடந்தது போன்று, கூட்டு வன்புணர்வு கொடுமை ஒரு தொடர் கதையாகிவிடும் ஆபத்து உள்ளது.
இத்தனைக்கும், அரசியல்வாதிகளின் ஆசி மற்றும் ஆதரவில் நடைபெறும் முசாஃபர்பூர் மையம், அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடத்தல் கொடுமையில் இருந்து மீண்டாலும், அங்கு தங்கியிருந்த பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது வேதனையான ஒன்று.
சமூகத்தின் கடமை
இந்திய சமூகம் அமைதியாக வாளாவிராமல், இந்த விஷயத்தில் தனது கடமையில் இருந்து தவறாது, விழிப்புடன் செயலாற்ற வேண்டும். எனென்றால், சமுகத்தின் பங்களிப்பு அவசியமான ஒன்றாகும்.நம் அனைவருக்கும் இந்த கடமை உள்ளது.
விழிப்புடன் இருந்து, குழந்தைத் தொழிலாளர், கொத்தடிமைகள் மட்டுமல்லாது, பாலியல் சுரண்டல் இருப்பினும் இல்லாவிடினும், நமக்குத் தெரிய வரும் எந்த விதமான மனிதக் கடத்தலையும் உரிய அதிகாரிகளுக்கு தாமதமின்றி தெரியப்படுத்த வேண்டும்.
இந்தப் பெருந்தீமையைத் தடுக்க நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரம் இது. தவறினால், இன்னும் பெருவாரியான பெண்களையும், எதிர்காலத் தலைமுறையினரான நமது சிறார் மற்றும் சிறுமிகளையும், இவர்களின் கோரப்பசிக்கு இரையாகக்கூடும்.
ஏனவே, நாம் நிச்சயமாக அது நடந்தேற விடப்போவதில்லை. அதற்கு சாவு மணிஅடித்து சவக்குழியில் புதைக்க ஒவ்வொருவரும் உறுதியேற்போம்.
இதையும் படிங்க:கரோனாவை எதிர்க்கும் உணவுகள் இவைதானாம்!- பரிந்துரைக்கப்படும் உணவுகள்